1,140 தொழிலாளர்கள் சென்றனர் கன்னியாகுமரியில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு சிறப்பு ரெயில் கலெக்டர் வழியனுப்பி வைத்தார்
கன்னியாகுமரியில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு 1,140 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் சென்றனர். கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு 1,140 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் சென்றனர். கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
சிறப்பு ரெயில்கள்
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. 5-வது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கால் குமரி மாவட்டத்தில் வேலை இழந்து தவித்த வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி தனி ரெயிலில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதலில் நாகர்கோவிலில் இருந்து பீகாருக்கு 957 பேரும், 2-ம் கட்டமாக கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தானுக்கு 334 பேரும், ஜார்க்கண்டுக்கு 554 பேரும் சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்துக்கு 830 தொழிலாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். இறுதி கட்டமாக நேற்று குமரி மாவட்டத்தில் தங்கி உள்ள மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்துக்கு...
இதற்காக 22 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் மேற்கு வங்காளத்துக்கு இயக்குவதற்காக கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை முதல் கிள்ளியூர், கல்குளம், விளவங்கோடு, குழித்துறை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து 1,140 வடமாநில தொழிலாளர்கள் அரசு பஸ்கள் மூலம் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
ரெயில் நிலையத்துக்கு வந்த தொழிலாளர்களுக்கு கொட்டாரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் நிதுன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பெல்சன், ஸ்டெப்பான்ஸ், அரிகரசுதன், ரெயில்வே சுகாதார ஆய்வாளர் அல்பின் ஆகியோர் தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்தனர். பின்னர், அவர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தபின் ரெயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். அப்போது, அனைத்து தொழிலாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
கலெக்டர் வழியனுப்பினார்
மாலை 3.40 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் புறப்பட்டது. சிறப்பு ரெயிலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். சிறப்பு ரெயில் 5.30 மணிக்கு நெல்லை சென்றது. நெல்லை மாவட்டத்தில் இருந்து 350 வடமாநில தொழிலாளர்கள் ஏறினர். இந்த ரெயில் மதுரை, சேலம், ரேனிகுண்டா, குடூர் சந்திப்பு, விஜயவாடா, துவாடா வழியாக 6-ந்தேதி அதிகாலை 4.45 மணிக்கு மேற்கு வங்க மாநில நியூ ஜெல்பைகுரியை சென்றடைகிறது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னான், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகிம், ரெயில் நிலைய மேலாளர் முருகன், ரெயில் நிலைய அதிகாரி ராஜேந்திர பிரசாத் மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உணவு பொருட்கள்
முன்னதாக மேற்கு வங்காளத்துக்கு சென்ற தொழிலாளர்கள், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல் நிலைப்பள்ளியில் இருந்து பஸ்கள் மூலம் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், புலம் பெயர் தொழிலாளர்கள் நல மைய ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான ராபர்ட் புரூஸ் வழங்கினார்.
அவருடன் வட்டார தலைவர் வைகுண்டதாஸ், முன்னாள் வட்டார தலைவர் விஜய், ஆளூர் தலைவர் வில்லியம் ஜாண், திருத்துவதாஸ், செல்வராஜ், மதியழகன், மாதவன்பிள்ளை, சிதம்பரம் செட்டியார், கந்தசாமி, சாது சுரேஷ், ஆல்பர்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story