73 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பினர் சின்னமுட்டத்தில் சமூக இடைவெளியுடன் மீன் விற்பனை


73 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பினர் சின்னமுட்டத்தில் சமூக இடைவெளியுடன் மீன் விற்பனை
x
தினத்தந்தி 4 Jun 2020 7:21 AM IST (Updated: 4 Jun 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

சின்னமுட்டத்தில் இருந்து மீனவர்கள் 73 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்று, திரும்பினர். சின்னமுட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி மீன் விற்பனை நடந்தது.

கன்னியாகுமரி, 

சின்னமுட்டத்தில் இருந்து மீனவர்கள் 73 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்று, திரும்பினர். அதைத்தொடர்ந்து சின்னமுட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி மீன் விற்பனை அமோகமாக நடந்தது. வியாபாரிகள் போட்டி, போட்டு மீன்களை வாங்கி சென்றனர்.

மீன்பிடி தடைகாலம்

கொரோனா நோய் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு வசதியாக ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடை காலம் வந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு தொடர்ந்து செல்லாமல் இருந்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கால் தடைகாலத்துக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தடை காலத்தை 61 நாளில் இருந்து 47 நாட்களாக குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதைதொடர்ந்து மே 31-ந்தேதியுடன் தடைகாலம் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால், கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்ட 350 மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் தலைமையில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் 10 நிபந்தனைகளுடன் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக சின்னமுட்டம் மீனவர்கள் விசைப்படகுகளை பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல், படகுகளுக்கு டீசல் நிரப்புதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

சுழற்சி முறையில்...

அதைதொடர்ந்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் 73 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் மொத்தமாக மீன்பிடிக்க செல்லாமல் சுழற்சி முறையில் செல்ல மீன்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி நேற்று 96 விசைப்படகு மீனவர்கள் மட்டும் சின்னமுட்டத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் டோக்கன் பெற்று கடலுக்கு சென்றார்கள். இதனால், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களைகட்டியது.

இந்த நிலையில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல ஊர் கமிட்டி தலைவர் நாஞ்சில் மைக்கேல் தலைமையில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஊர் கமிட்டி செயலாளர் சந்தியா வில்வராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி, விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் சந்தியா ராயப்பன், வானவில் சகாயம், சிலுவை, சில்வஸ்டர், அந்தோணி ஜெபஸ்தியான் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீன்பிடிக்க செல்லும்போது மீனவர்கள் முககவசம் அணிந்து செல்ல வேண்டும், மீன்களை தரம் பிரித்து அந்தந்த ஏலக்கூடத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விற்பனை

நேற்று மாலை 6 மணி முதல் விசைப்படகுகள் கரைக்கு திரும்ப தொடங்கின. இரவு 9 மணி வரை படகுகள் கரை திரும்பின. 73 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு விள மீன், பாறை, வாவல், திருக்கை, நெடுவா, நவரை, நெய் மீன் போன்ற விலை உயர்ந்த மீன்களும் ஏராளமாக வலையில் சிக்கி இருந்தன.

இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து கரை திரும்பிய மீன்கள் ஏலம் விடும் கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறிய ரக மீன்கள், பெரிய ரக மீன்கள் மற்றும் உயர ரக மீன்கள் என தனித்தனியாக பிரித்து ஏலம் நடந்தது. மீன்களை ஏலம் எடுக்க கேரளா உள்பட வெளி மாநில வியாபாரிகள் பலரும் குவிந்து இருந்தனர். அவர்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

பெரிய ரக விள மீன் ஒரு கூடை ரூ.500-க்கும், சிறிய ரகம் ரூ.300-க்கும் விற்பனையானது. நெய் மீன் ஒரு கூடை ரூ.1,000-க்கு விற்பனையானது. சின்னமுட்டத்தில் மீனவர்களும், வியாபாரிகளும் முக கவசம் அணிந்து, இருந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றி மீன் விற்பனை நடந்தது.

ரூ.10 ஆயிரத்துக்கு விலை போன மீன்

ஒரு மீனவர் பிடித்து வந்த 25 கிலோ எடை கொண்ட விள மீனை ஏலம் எடுக்க வியாபாரிகள் போட்டி போட்டனர். இதனால் அந்த ஒரு மீன் மட்டும் ரூ.10 ஆயிரத்துக்கு விலை போனது. இதே போல் ஏராளமான மீன்கள் நல்ல விலைக்கு போனது.

கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சின்னமுட்டத்துக்கு வந்து இருந்தனர். அப்போது அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம்போலீசார் அறிவித்தபடி இருந்தனர்.

Next Story