நெல்லையில் உப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது உதவிக்கு சென்ற அரசு பஸ் டிரைவர் காயம்
நெல்லையில் உப்பு மூட்டை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது உதவிக்கு சென்ற அரசு பஸ் டிரைவர், உப்பு மூட்டைக்கு அடியில் சிக்கி காயம் அடைந்தார்.
நெல்லை,
நெல்லையில் உப்பு மூட்டை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது உதவிக்கு சென்ற அரசு பஸ் டிரைவர், உப்பு மூட்டைக்கு அடியில் சிக்கி காயம் அடைந்தார்.
உப்பு லாரி கவிழ்ந்தது
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று நடைபயிற்சிக்கு சென்றபோது, நெல்லை சந்திப்பு பகுதிக்கு தூத்துக்குடி பகுதியில் இருந்து ஒரு லாரியில் டிரைவர் சின்னத்துரை என்பவர் உப்பு மூட்டைகள் ஏற்றி வந்தார்.
அந்த லாரியை சந்திப்பு பஸ்நிலைய பகுதிக்கு திருப்ப முடியாமல் டிரைவர் திணறினார். அப்போது அங்கு நின்ற மாரியப்பன், லாரி டிரைவருக்கு உதவி செய்தார். இந்த நிலையில் அங்குள்ள கழிவு நீர் ஓடையில் லாரியின் டயர் ஏறியது. உடனே லாரியின் ஒரு பக்கம் கவிழ்ந்து, உப்பு மூட்டைகள் சரிந்தன.
பஸ் டிரைவர் காயம்
இதில் மாரியப்பன் சிக்கிக்கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து இரும்பு கம்பிகள் மூலம் உப்பு மூட்டைகளை அப்புறப்படுத்தி மாரியப்பனை மீட்டனர். இதில் காயம் அடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story