நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.1½ கோடியில் சிறப்பு கடன் உதவி
நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1 கோடியே 44 லட்சத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சிறப்பு கடன் உதவியை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
நெல்லை,
நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1 கோடியே 44 லட்சத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சிறப்பு கடன் உதவியை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
கடன் வழங்கும் விழா
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பொருளாதாரக்கடன் வழங்கும் விழா நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.
மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் 36 பேருக்கு ரூ.24 லட்சத்து 25 ஆயிரமும், சிறுவணிகர்கள் 24 பேருக்கு ரூ.6 லட்சமும், பாளையங்கோட்டை கிளையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.96 லட்சமும், மற்ற கிளைகளின் மூலம் 91 பேருக்கு ரூ.18 லட்சத்து 35 ஆயிரமும், ஆக மொத்தம் 379 பேருக்கு, ரூ.1 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரம் கடன் தொகையை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், இந்த கடன் வழங்கும் திட்டம் முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் செயல்படுத்தப்படுகிறது. மத்திய கூட்டுறவு வங்கியின் 32 கிளைகள் மூலமும் 158 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமும் கடன் வழங்கப்படுகிறது. இங்கு மிக குறைந்த வட்டியில் நகை கடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரூ.78 கோடியே 32 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது ரூ.1 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு உள்ளது“ என்றார்.
ரூ.78 கோடி
மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா கூறுகையில், “நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுடன் 2212 குழுக்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுடன் 2299 குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் 1696 குழுக்களுக்கு ரூ.78 கோடியே 32 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கொரோனா சிறப்பு கடனாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சிறுவணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை வாங்கி கந்துவட்டி கொடுமையில் இருந்து விடுபடவேண்டும்“ என்றார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், ஆவின் தலைவர் சுதா பரமசிவன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம், அ.தி.மு.க. மாநகர் மாவட்ட அவை தலைவர் பரணிசங்கரலிங்கம், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் குருமூர்த்தி, கூட்டுறவு இணைப்பதிவாளர் பிரியாதர்ஷினி, முதன்மை வருவாய் அதிகாரி பாலகிருஷ்ணன், துணைபதிவாளர் முத்துசாமி, பொதுமேலாளர் செல்லப்பாண்டியன், உதவி பொதுமேலாளர்கள் பாஸ்கரன், ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 56 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பில் 3 சக்கர மோட்டார் சைக்கிள்களை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
கால்வாய் தூர்வாரும் பணி
நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி, சத்திரம்புதுக்குளம் பகுதியில் உள்ள கால்வாயை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நடக்கிறது. இந்த பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் அமைச்சர் ராஜலட்சுமி நேற்று தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் சுதா பரமசிவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் குமார், தாசில்தார் பகவதி பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story