எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களை 11-ந் தேதிக்குள் விடுதிக்கு வரவழைக்க வேண்டும்; முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களை 11-ந் தேதிக்குள் விடுதிக்கு வரவழைக்க வேண்டும்; முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 4 Jun 2020 8:23 AM IST (Updated: 4 Jun 2020 8:23 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை வருகிற 11-ந் தேதிக்குள் விடுதிக்கு வரவழைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்படவில்லை. இந்த தேர்வு வருகிற 15-ந் தேதி தொடங்கி நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் 21 ஆயிரத்து 303 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 308 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நாமக்கல் கல்வி மாவட்டத்தை சேர்ந்த முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து தற்போது வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள மாணவ, மாணவிகள் அனைவரையும் வரவழைக்க வேண்டும். அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டும். அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளை வருகிற 11-ந் தேதிக்குள் வரவழைக்க வேண்டும். இதேபோல் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் இங்கு தங்கி இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாணவருக்கும் தலா 3 முககவசம் வழங்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க மாணவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். தேர்வு அறைகளுக்கு செல்லும் முன்பு மாணவர்கள் சோப்பு போட்டு கைழுவி விட்டு செல்லவும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டமும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக காலை மற்றும் மாலை என இருபிரிவாக நடத்தப்பட்டது. இதில் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தை சேர்ந்த முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கே.எஸ்.ஆர்.கல்லூரி கலையரங்கில் நடக்கிறது. 

Next Story