நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 Jun 2020 3:05 AM GMT (Updated: 4 Jun 2020 3:05 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 82 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் திருச்செங்கோட்டை சேர்ந்த 49 வயது நிரம்பிய லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்ட நிலையில், மீதமுள்ள 81 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்திற்கு சென்று திரும்பிய 22 வயது நிரம்பிய திருமலைப்பட்டி அருகே உள்ள எடையப்பட்டியை சேர்ந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொண்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு பரிசோதனை மேற்கொண்ட நபர்களில் 171 பேர் சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதவிர 1,447 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதாரத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து திரும்பியபோதே கொரோனா அறிகுறி இருந்ததால் சொந்த ஊருக்கு போகவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story