சேலத்தில் டாக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சேலத்தில் டாக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்களை மாவட்ட எல்லைகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மராட்டியத்தில் இருந்து சேலம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுதவிர சேலம் மாவட்டத்தை சேர்ந்த முதுகலை பட்டமேற்படிப்பு டாக்டர் ஒருவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணியில் சேர சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் சேலம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘சேலம் மாவட்டத்தில் மராட்டியத்தில் இருந்து வந்த 2 பேர் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணியில் சேர சென்ற சேலத்தை சேர்ந்த முதுகலை பட்டமேற்படிப்பு டாக்டர் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் 188 பேருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்’ என்றனர்.