கொரோனா வேகமாக பரவும் நிலையில் திருச்சியில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள்
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் திருச்சியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு விட்டு கூடுகிறார்கள். இதனால் வாகனங்களும் நெருக்கடியில் சிக்கி தவித்தன.
திருச்சி,
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் திருச்சியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு விட்டு கூடுகிறார்கள். இதனால் வாகனங்களும் நெருக்கடியில் சிக்கி தவித்தன.
5-ம் முறையாகஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் பொதுமக்களின் வாழ்வாதாரம், வறுமை, பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கில் இருந்து பல தொழில்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு இருந்த நேர கட்டுப்பாடு விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது.
சமூக இடைவெளி
ஜவுளி கடைகள், நகை கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பெரிய அளவிலான வணிக வளாகங்கள் தவிர அனைத்து கடைகளும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் ஒன்றாக கூடக்கூடாது. 6 அடி இடைவெளி விட்டு சமூகவிலகலை கடைபிடிக்கவேண்டும், வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணியவேண்டும், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் தேவை இல்லாமல் வெளியில் வரக்கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளையும் தமிழக அரசு விதித்து உள்ளது.
ஆனால் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு விட்டதாலும், போக்குவரத்திற்கு அரசு பஸ்கள் இயங்குவதாலும் ஏற்பட்ட மகிழ்ச்சியில் பொதுமக்கள் கடைவீதியில் குவிய தொடங்கி விட்டனர். திருச்சி பெரிய கடை வீதியில் பெரிய, சிறிய அளவிலான நகை கடைகள், ஜவுளி கடைகள், மளிகை கடைகள், பாத்திர கடைகள் என அனைத்து விதமான கடைகளும் உள்ளன. நேற்று காலை முதல் மதியம் வரை பெரிய கடை வீதியே திருவிழா கூட்டம் போல களைகட்டி காணப்பட்டது.
மக்கள் குவிந்தனர்
ஒவ்வொரு கடைகளிலும் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக குவிந்தனர். சமூக இடைவெளியை மறந்து ஒருவரை இடித்துக்கொண்டும், உரசிக்கொண்டும் பொருட்களை வாங்கினார்கள். மேலும் சாலையில் நடந்து சென்றவர்களில் பலர் முக கவசம் கூட அணியவில்லை.
மக்கள் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோக்களிலும் வந்து குவிந்ததால் பெரிய கடைவீதியில் வாகன நெருக்கடியும் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போலீசார் கூட இல்லாததால் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன.
வேகமாக பரவும் கொரோனா
தமிழகத்தை பொறுத்தவரை ஐந்தாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில் தான் கொரோனாவும் எந்தவித கட்டுக்கும் அடங்காமல் வேகமாக பரவி வருகிறது. திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி உயிரிழந்து உள்ளார். நேற்று முன்தினம் ஒரே நாளில் திருச்சியில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஊரடங்கில் இருந்து அளிக்கப்பட்ட தளர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விதிமுறைகளை கடை பிடிக்காமல் செல்வதை பார்த்தால் அவர்கள் கொரோனா வைரசை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறார்களோ? என்று தான் கருத தோன்றுகிறது. எனவே கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி வரும் நிலையில் மக்கள் ஒவ்வொருவரும் தனக்கு தானே சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் அரசால் மட்டும் இன்றி யாராலும் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
Related Tags :
Next Story