திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீண்டும் ‘தீ’ கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டதால் அச்சத்தில் வியாபாரிகள்


திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீண்டும் ‘தீ’ கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டதால் அச்சத்தில் வியாபாரிகள்
x

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீண்டும் தீப்பிடித்தது. இதில் கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்ததால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

திருச்சி, 

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீண்டும் தீப்பிடித்தது. இதில் கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்ததால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

மூடப்பட்ட காந்தி மார்க்கெட்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி மூடப்பட்டது. இதனால் காந்தி மார்க்கெட்டில் நடந்து வந்த அனைத்து மொத்த வியாபாரங்களும் தற்போது பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தினமும் இரவில் மட்டும் நடந்து வருகிறது. வியாபாரிகள் காந்தி மார்க்கெட்டில் உள்ள தங்களது கடைகளை பூட்டிவிட்டனர். யாரும் உள்ளே நுழைந்து கடைகளை திறந்து விடாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் காந்தி மார்க்கெட்டின் 6 கேட்களையும் மூடி வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் கடைகளின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த கீற்று கொட்டகை மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதில் சுமார் 8 கடைகள் சேதம் அடைந்தன.

மீண்டும் தீப்பிடித்தது

இந்தநிலையில், காந்தி மார்க்கெட்டில் நேற்று காலை 11.30 மணி அளவில் தேங்காய் கடை வரிசைக்கு எதிரே விதைகள், காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு முன்பாக போடப்பட்டிருந்த கீற்று பந்தலில் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருச்சி தீயணைப்பு படையினர், நிலைய அதிகாரி மெல்க்யூ ராஜா தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதனால் சுமார் 50 அடி நீளத்திற்கு போடப்பட்டிருந்த கீற்று பந்தல் மட்டும் எரிந்து சேதம் அடைந்தது. கடைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதுதொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூட்டுகள் உடைப்பு

இதற்கிடையில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் தீப்பிடித்து எரிந்த பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததாகவும், கடைகளில் இருந்த பணம் உள்ளிட்ட சில பொருட்கள் திருட்டு போய் இருப்பதாகவும் போலீசாரிடம் கூறினார்கள்.

இதனால் சமூக விரோதிகள் யாரும் உள்ளே புகுந்து மூடப்பட்டிருந்த கடைகளில் பொருட்களை திருடி விட்டு தீ வைத்தார்களா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. மூடப்பட்ட காந்தி மார்க்கெட்டில் 2-வது முறையாக ஏற்பட்ட தீ, பூட்டு உடைப்பு போன்ற சம்பவங்கள் வியாபாரிகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story