விருதுநகர் மாவட்டத்தில் சென்னையில் இருந்து வந்த நர்ஸ், ஆசிரியை உள்பட 9 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 159 ஆக உயர்வு


விருதுநகர் மாவட்டத்தில்  சென்னையில் இருந்து வந்த நர்ஸ், ஆசிரியை உள்பட 9 பேருக்கு கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை 159 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 Jun 2020 10:01 AM IST (Updated: 4 Jun 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் சென்னையில் இருந்து திரும்பிய 8 பேர் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 159 ஆகஉயர்ந்துள்ளது.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 9,962 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. 269 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள 6 தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் 221 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 73 பேர் இலங்கையில் இருந்து கப்பல் மூலம் வந்தவர்கள். இதுவரை 62 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

8 பேர்

இந்தநிலையில் நேற்று சென்னையில் இருந்து வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 2 பெண்களும். 2 வயது சிறுவனும் உள்ளனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள எட்டக்காப்பட்டியை சேர்ந்த 28 வயது வாலிபர், சிவகாசி அம்மன்நகரை சேர்ந்த 37 வயது நபர், சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்த 24 வயது நபர் மற்றும் அவரது 2 வயது மகன், சாத்தூர் குறிஞ்சிநகரை சேர்ந்த 26 வயது வாலிபர், சாத்தூரை சேர்ந்த 47 வயதான ஆசிரியை, 35 வயதான நர்ஸ், திருச்சுழி அருகே உள்ள மேலகண்டமங்கலத்தை சேர்ந்த 35 வயது நபர் ஆகிய 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவருமே சென்னையில் இருந்து திரும்பியவர்கள். இந்நிலையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த 54 வயது நபர் இதயநோய் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைபெற சென்றபோது பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

உயர்வு

இதன் மூலம் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை முகாம்களில் தனிமைப்படுத்தும் மாவட்ட நிர்வாகம் சென்னையில் இருந்து வருபவர்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளிலாவது தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை கடைப்பிடிக்காத நிலையில் தற்போது 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இவர்கள் மூலம் அவர்கள் வசிக்கும் பகுதியில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அப்பகுதிகளில் பரவலான மருத்துவ பரிசோதனை செய்தால் தான் தெரியும். சென்னையில் இருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்த சில கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கிராமப்பகுதிகளிலும், நகர் பகுதிகளிலும். நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Next Story