குறைந்த எண்ணிக்கையில் செயல்படுவதால் ஆதார் மையங்களில் அதிகரிக்கும் கூட்டம்


குறைந்த எண்ணிக்கையில் செயல்படுவதால்  ஆதார் மையங்களில் அதிகரிக்கும் கூட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2020 11:07 AM IST (Updated: 4 Jun 2020 11:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் செயல்படுவதால் ஆதார் மையங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம்,காங்கேயம், தாராபுரம்,ஊத்துக்குளி, மடத்துக்குளம், உடுமலை ஆகிய 9 தாசில்தார் அலுவலகங்களில் ஆதார் மையம் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர எல்காட் நிறுவனத்தின் சார்பில் மாவட்டத்தில் 12 இடங்களில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் ஆதார் மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆதார் மையங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இதனால் புதிதாக ஆதார் பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டையில் திருத்தம், மாற்றம் இருந்தால் அவற்றை செய்யவும் தினமும் மக்கள் அதிக அளவில் ஆதார் மையங்களை நோக்கி வருகிறார்கள். தற்போது தாசில்தார் அலுவலகங்களில் உள்ள ஆதார் மையம் மட்டும் செயல்படுவதால் அங்கு அதிகப்படியான கூட்டம் காணப்படுகிறது. திருப்பூரில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் மட்டும் ஆதார் மையம் செயல்படுவதால் அங்கு கூட்டம் குவிந்து வருகிறது.

அனைத்து மையங்களும்...

இதுகுறித்து எல்காட் அதிகாரிகளிடம் கேட்டபோது, ஊரடங்கால் மூடப்பட்ட பிறகு ஆதார் மையத்தை திறப்பது குறித்து எங்களுக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து தகவல் இதுவரை வரவில்லை. உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு கிடைத்ததும் ஆதார் மையங்கள் செயல்படும் என்றனர். நாள்தோறும் ஆதார் பதிவுக்காக வரும் மக்களின் வசதிக்காக எல்காட் நிறுவனத்தின் கீழ் உள்ள ஆதார் மையங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story