கந்தர்வகோட்டை சிறுமி கொலை வழக்கில் தந்தை உள்பட 2 பேர் திருச்சி சிறையில் அடைப்பு
கந்தர்வகோட்டை சிறுமி கொலை வழக்கில் கைதான தந்தை உள்பட 2 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை,
கந்தர்வகோட்டை சிறுமி கொலை வழக்கில் கைதான தந்தை உள்பட 2 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பெண் மந்திரவாதி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிறையில் அடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தில் தைல மரக்காட்டில் 13 வயதான வித்யா கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிரடி திருப்பமாக அவளது தந்தை பன்னீர் மற்றும் உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குடும்ப பிரச்சினை மற்றும் பணத்தேவைக்காக பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு, மகளை நரபலி கொடுத்ததாக போலீசாரிடம் பன்னீர் வாக்குமூலம் கொடுத்திருந்தார். பெற்ற மகளை தந்தை நரபலி கொடுத்தது போலீசாருக்கு மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கைதான 2 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலீசார் தங்களது புலன் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
20 வருடங்களாக...
இந்த வழக்கில் தொடர்புடைய மந்திரவாதியான புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி, அவருக்கு உடந்தையாக இருந்த முருகாயி ஆகியோர் மீது கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பெண் மந்திரவாதி உள்பட 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் பெண் மந்திரவாதி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
புதுக்கோட்டை நகர் பகுதியை சேர்ந்த அந்த பெண் மந்திரவாதி, கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மாந்திரீகத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பிறரை வசியம் செய்வதில் அவர் கைதேர்ந்தவர். அவருடன் பன்னீருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை நாட்டு சிலை
கைதான பன்னீருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனால், செலவுக்கு பணத்தேவையும் இருந்திருக்கிறது. பணத்தேவைக்காக மந்திரவாதியிடம் ஆலோசனை கேட்டபோது தான், மகளை நரபலி கொடுத்திருக்கிறார். பெண் மந்திரவாதி பல செல்போன்களையும், சிம்கார்டுகளையும் அடிக்கடி மாற்றி, மாற்றி பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இலங்கை நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு சிலையை வைத்து அவர் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. பன்னீரை போல வேறு நபர்களும் மந்திரவாதியின் ஆலோசனை கேட்டு இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டனரா? என்பது அவரை பிடித்து விசாரித்தால் தான் உண்மை தெரியும். விரைவில் பெண் மந்திரவாதி பிடிபடுவார்.
பன்னீர் சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story