கிழுமத்தூர் ஏரியில் குத்தகைதாரர் தடுத்தும் பொதுமக்கள் மீன் பிடிப்பு இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு
கிழுமத்தூர் ஏரியில் குத்தகைதாரர் தடுத்தும் பொதுமக்கள் மீன் பிடித்தனர். அப்போது இரு சக்கர வாகனங்களுக்கு யாரோ தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னம்,
கிழுமத்தூர் ஏரியில் குத்தகைதாரர் தடுத்தும் பொதுமக்கள் மீன் பிடித்தனர். அப்போது இரு சக்கர வாகனங்களுக்கு யாரோ தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் மீன் பிடித்தனர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி 350 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் வற்றும் போது, மீன் பிடிக்க குத்தகைக்கு விடுவது வழக்கம். இந்த ஆண்டு அந்த ஏரியின் மீன்பிடி குத்தகையை ரூ.3 லட்சம் செலுத்தி அரியலூரை சேர்ந்த மணிவேல் என்பவர் எடுத்திருந்தார். இந்த ஏரியில் மணிவேல் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகளை விட்டு, வளர்த்து கடந்த 6 மாத காலமாக இரவு, பகலாக காவல் காத்து பராமரித்து வந்தார். இந்நிலையில் மீன்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை அளவிற்கு வளர்ந்து இருந்தது. மணிவேல் வருகிற 6-ந்தேதி மீன் பிடிப்பதற்காக காத்திருந்தார்.
இந்நிலையில் கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒரு சிலர் கொடுத்த தகவலின் பேரில் மீன் பிடிப்பதற்காக குழுமூர், துங்கபுரம், ஓலைப்பாடி, திம்மூர், அகரம்சிகூர், அத்தியூர், வடக்கலூர், ஒகளூர், நன்னை, வேப்பூர், பெருமத்தூர் உள்ளிட்ட 25 கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் நேற்று அதிகாலையில் ஏரியின் அருகே திரண்டனர். அப்போது அங்கு ஏரியில் காவலுக்கு இருந்த குத்தகைதாரர் மணிவேல், பொதுமக்களை தடுத்தும், அவர்கள் யாரும் கேட்காமல் ஏரிக்குள் இறங்கி மீன்பிடிக்க தொடங்கினர்.
தீ வைப்பு
இதைப்பார்த்த மணிவேல் மனமுடைந்து வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டு ஏரிக்கரையில் அழுது புரண்டார். இந்த சூழ்நிலையில் மீன்பிடிக்க வந்தவர்களின் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளை யாரோ தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த குன்னம் தாசில்தார் சின்னதுரை மற்றும் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன்பிடிக்க வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் ஏரி குத்தகைதாரர் மணிவேலையும், எரிந்த மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளின் உரிமை யாளர்களையும் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்குமாறும் போலீசார் தெரிவித்து விட்டு சென்றனர்.
இந்நிலையில் எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஒலைப்பாடி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் கூட்டத்தில் தன்னை யாரோ அடித்து விட்டதாக கூறி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கிழுமத்தூர் ஏரியில் ஒவ்வொருவரும் சுமார் 10 கிலோ எடை கொண்ட மீன்களை பிடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story