பெரம்பலூரில் அ.ம.மு.க. பிரமுகர் படுகொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


பெரம்பலூரில் அ.ம.மு.க. பிரமுகர் படுகொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Jun 2020 11:58 AM IST (Updated: 4 Jun 2020 11:58 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் அ.ம.மு.க. பிரமுகரை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூரில் அ.ம.மு.க. பிரமுகரை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கத்தியால் குத்தி கொலை

பெரம்பலூர் சங்குப்பேட்டை நேரு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாண்டி என்கிற வல்லத்தரசு (வயது 24). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெரம்பலூர் நகர மாணவரணி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர்-விளாமுத்தூர் சாலை பகுதியில் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சூர்யாவுடன் (27) பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று கத்தியால் வல்லத்தரசுவை குத்தி கொலை செய்தது. அதை தடுத்த சூர்யாவையும் அந்த கும்பல் தலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சிகிச்சையில் இருந்த சூர்யாவிடம் போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தினர். அதில், வல்லத்தரசுவின் அண்ணன் மணிகண்டனை, சங்குப்பேட்டையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் தகாத வார்த்தையால் திட்டியது சம்பந்தமாக ஏற்கனவே வல்லத்தரசுவிடம் தகராறு ஏற்பட்டு, பின்னர் அவர் சமாதானம் ஆகி உள்ளார்.

முன்விரோதம் காரணமாக...

இந்த முன்விரோதம் காரணமாக விஜயராஜ், சங்குப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ், காக்க கார்த்தி, கஞ்சா ராஜா ஆகியோருடன் சென்று வல்லத்தரசுவிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பிரகாஷ் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வல்லத்தரசுவை கத்தியால் குத்தினார். இதனை தடுத்த சூர்யாவை, பிரகாஷ் தலையில் கத்தியால் குத்தினார். இதையடுத்து வல்லத்தரசுவை ஓட, ஓட விரட்டி சென்று பிரகாஷ், காக்க கார்த்தி, கஞ்சா ராஜா ஆகியோர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு, அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் என சூர்யா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக சூர்யா கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் பிரகாஷ், விஜயராஜ், காக்க கார்த்தி, கஞ்சா ராஜா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்து விசாரித்தால் தான், வல்லத்தரசுவை கொலை செய்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் நேற்று மதியம் வல்லத்தரசுவின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வல்லத்தரசுவின் குடும்பத்தினர், உறவினர்கள், சங்குப்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்யக்கோரி பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் அவர்களிடம் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்று கூறியதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர். பின்னர் வல்லத்தரசுவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story