அரியலூர் மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


அரியலூர் மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 4 Jun 2020 12:10 PM IST (Updated: 4 Jun 2020 12:10 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தந்தையை கொன்ற மகன்கள்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமழப்பாடி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கனகசபை. இவர் கீழையூர் துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 18-ந்தேதி கனகசபை பணியில் இருந்த போது, அவரது முதல் மனைவியின் மகன்களான கலைச்செல்வன் (வயது 27), கலைவாணன்(20) ஆகிய 2 பேர் சேர்ந்து ஜீவனாம்சம் வழங்க மறுத்தாக கூறி கனகசபையை கழுத்தறுத்து கொலை செய்தனர். இது தொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வன், கலைவாணன் ஆகியோரை கைது செய்து ஜெயங் கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தில்குமாருக்கும், அவரது சித்தியான தேன்மொழி குடும்பத்தினருக்கும் பொதுவான கிணற்றில் இருந்து நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று தேன் மொழியின் மகன் விக்னேஷ் (20) தனது குடும்பத்தினருடன் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று வாய்த்தகராறில் ஈடுபட்டார். அப்போது விக்னேஷ் அரிவாளால் செந்தில்குமாரின் அண்ணன் மணிகண்டன் மற்றும் அமரமூர்த்தி ஆகியோரை வெட்டியதில், அவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக விக்னேசை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

4 பேர் மீது குண்டர் சட்டம்

அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமம் கீழவேந்தன் தெருவைச் சேர்ந்தவர் அமிர்தராஜ்(44). இவர் சம்பவத்தன்று வனத்து சின்னப்பர் கோவில் கொள்ளிடம் ஆற்றுக் கரையில் விஷத்தன்மையுள்ள சாராயம் தயாரிக்க 540 லிட்டர் ஊறல் போட்டிருந்தார். மேலும் 20 லிட்டர் சாராயம் தயாரித்து வைத்திருந்தார். இதனை கண்டுபிடித்த வெங்கனூர் போலீசார் சாராய ஊறலையும், சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். பின்னர் அமிர்தராஜை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் சிறையில் இருக்கும் 4 பேரின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரை ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் இது தொடர்பாக கலெக்டரிடம் மேற்பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ரத்னா சிறையில் உள்ள 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங் கொண்டம் கிளை சிறையில் இருந்த கலைச் செல்வன், கலைவாணன், விக்னேஷ், அமிர்தராஜ் ஆகிய 4 பேரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டதற்காக உத்தரவின் நகலை போலீசார் வழங்கி, அவர்கள் 4 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story