மேட்டுப்பாளையத்தில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு சிறப்பு ரெயில் வடமாநில தொழிலாளர்கள் பயணம்
மேட்டுப்பாளையத்தில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு நேற்று சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதில் வடமாநில தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள மில்கள், தொழிற்சாலைகள், கட்டுமான மையங்களில் 2 லட்சத்துக்கும் மேலான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பு குறைந்ததால் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், அசாம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதனால் கோவை மாவட்டத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரு சிறப்பு ரெயில்
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இயக்கப்பட்ட 32 ரெயில்கள் மூலம் 44 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
இதில் ஊட்டியில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் 300 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். அந்த ரெயில் பகல் 2.30 மணிக்கு கோவை வந்தது. கோவையை சேர்ந்த 300 தொழிலாளர்கள் அந்த ரெயிலில் பயணம் செய்தனர். முன்னதாக வடமாநில தொழிலாளர்கள் பஸ் மூலம் கோவை ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர்கள் ரெயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த ரெயிலில் திருப்பூர் உள்பட மேலும் பல ஊர்களில் வடமாநில தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல வசதி செய்யப்பட்டது.
Related Tags :
Next Story