தஞ்சை புதிய பஸ் நிலையத்தில், தம்பதியினர் தவற விட்ட ரூ.3 லட்சத்தை கண்டெடுத்த போக்குவரத்துக்கழக ஊழியர்


தஞ்சை புதிய பஸ் நிலையத்தில், தம்பதியினர் தவற விட்ட ரூ.3 லட்சத்தை கண்டெடுத்த போக்குவரத்துக்கழக ஊழியர்
x
தினத்தந்தி 4 Jun 2020 10:30 PM GMT (Updated: 4 Jun 2020 10:30 PM GMT)

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தம்பதியினர் தவற விட்ட ரூ.3 லட்சத்தை அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் கண்டெடுத்தார்.

பிள்ளையார்பட்டி,

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தம்பதியினர் தவற விட்ட ரூ.3 லட்சத்தை அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் கண்டெடுத்தார். அந்த பணம் போலீசார் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

போக்குவரத்துக்கழக ஊழியரின் நேர்மை

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று வேடிக்கையாக சொல்வார்கள். ஆனால் பஸ் நிலையத்தில் தம்பதியினர் தவறவிட்ட ரூ.3 லட்சத்தை போக்குவரத்துக்கழக ஊழியர் ஒருவர் கண்டெடுத்து கொடுத்ததால் அந்த பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது நேர்மையான நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிகிறது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

கேட்பாரற்று கிடந்த கைப்பை

தஞ்சை சாலியமங்கலம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி(வயது 57). இவர் அரசு போக்குவரத்துக்கழக தஞ்சை நகர் கிளையில் டிரைவிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர், தஞ்சையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் பணியில் இருந்தார்.

அப்போது அங்கு உள்ள ஆவின் பால்பூத் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளின் இருக்கையில் கருப்பு நிறத்தில் ஒரு பெண்களுக்கான கைப்பை(ஹேண்ட் பேக்) இருந்ததை துரைசாமி பார்த்தார். நீண்ட நேரமாக அந்த கைப்பை அந்த இடத்திலேயே கேட்பாரற்று கிடந்ததை பார்த்த அவர், அதை எடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் கணேசன், புறநகர் கிளை மேலாளர் செந்தில்குமார், தஞ்சை புதிய பஸ் நிலைய உதவி மேலாளர் சிவமயில்வேலன் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

ரூ.3 லட்சம்

உடனே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இந்த தகவலை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் ஆகியோரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த கைப்பையை போலீஸ் அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அப்போது அந்த பைக்குள் ரூ.3 லட்சத்து 1,000 இருந்தது. அந்த பணத்தை தவற விட்டு சென்றது யார்? என்று போலீஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும்போது அங்கு வேகமாக ஒரு ஆட்டோ வந்து நின்றது.

அவசரத்தில் தவற விட்டனர்

அந்த ஆட்டோவில் இருந்து இறங்கிய ஒரு தம்பதியினர் தாங்கள் ஒரு பையை பஸ் நிலையத்தில் தவற விட்டுச்சென்றதாகவும், அந்த பையில் ரூ.3 லட்சத்து 1,000 இருந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்த அப்துல் சமது-பைரோஜாபேகம் தம்பதியினரான அவர்கள் அம்மாபேட்டையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்காக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்து உள்ளனர்.

அங்கு வந்த அவர்கள், புதிய பஸ் நிலையத்தில் திருச்சி பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள ஆவின் பால் பூத்தில் டீ குடித்து விட்டு தாங்கள் கொண்டு வந்த பேக்குகளை எடுத்துக்கொண்டு திருச்சிக்கு புறப்பட்ட அரசு பஸ்சில் அவசரத்தில் ஏறி விட்டனர். மற்ற பேக்குகளை எடுத்துக்கொண்ட அவர்கள், பணம் இருந்த கைப்பையை மட்டும் அங்கேயே வைத்து விட்டு பஸ்சில் ஏறி உள்ளனர்.

உரியவர்களிடம் ஒப்படைப்பு

அவர்கள் ஏறிச்சென்ற பஸ், அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் சென்றபோதுதான் அவர்களுக்கு பணம் இருந்த பையை, பஸ் நிலையத்திலேயே தவற விட்டது தெரிய வந்தது. இதனால் பதறிப்போன அந்த தம்பதியினர் பஸ்சை விட்டு இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து மீண்டும் பஸ் நிலையத்திற்கு வந்து உள்ளனர். இந்த தகவல் அனைத்தும் போலீசாரின் விசாரணையில் உண்மை என்று தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு பணத்தை போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

உரிய நேரத்தில் அந்த பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த போக்குவரத்துக்கழக ஊழியர் துரைசாமியின் நேர்மையான நடவடிக்கையை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story