இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை


இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Jun 2020 4:10 AM IST (Updated: 5 Jun 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்த காயங்களுடன் இளம் பெண்

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி கடைவீதி அருகே உடலில் ரத்தக்காயங்களுடன் வடமாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த 2-ந் தேதி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த செங்கிப்பட்டி போலீசார் அந்த பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பெண்ணிடம் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அந்த இளம் பெண்ணை, தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார்(வயது44) என்பவர் தனது வீட்டு வேலைக்காக அழைத்து வந்துள்ளார். பின்னர் செந்தில்குமார் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலியல் தொழில்

மேலும் அவரது மனைவி ராஜம் என்பவரும் அந்த பெண்ணை துன்புறுத்தி உள்ளார். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி உள்ளனர். அதற்கு அந்த பெண் மறுக்கவே அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். அந்த பெண்ணின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத தகவல் அறிந்து அந்த பெண் தாயாரை பார்க்க ஊருக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் செந்தில்குமார் உள்பட 4 பேர் அந்த பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு செங்கிப்பட்டி அருகே உள்ள பூதலூர் பிரிவு சாலை அருகே வந்தபோது காலால் உதைத்து காரில் இருந்து வெளியே வீசி விட்டு சென்றது தெரிய வந்தது.

3 பேரை பிடித்து விசாரணை

இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் செந்தில்குமார், ராஜம் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று 3 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story