கூடலூரில் சூறாவளி காற்றுடன் மழை; வாழைகள் சாய்ந்து நாசம் விவசாயிகள் கவலை
கூடலூரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் வாழைகள் சாய்ந்து நாசமாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
தமிழக-கேரள எல்லையில் நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்டு கூடலூர் பகுதி உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கூடலூரிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து, மின்கம்பிகள் சேதம் அடைந்தன. இதனால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. அதனை மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வாழைகள் சாய்ந்தன
இதேபோன்று கூடலூர் அருகே உள்ள புளியாம்பாரா பகுதியில் கோபாலகிருஷ்ணன், வேணு, ஸ்ரீராஜா, ராஜேஷ் உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமான தோட்டங்களில் நூற்றுக்கணக்கான வாழைகள் பாதியில் முறிந்து சாய்ந்தன. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, வங்கியில் கடன் வாங்கி வாழை விவசாயம் மேற்கொண்டு வருகிறோம். அடுத்த 3 வாரங்களில் வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராகிவிடும் நிலையில் இருந்தன. இந்த நேரத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து, வாழைகளை சாய்த்து விட்டது. எனவே இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றனர். இதேபோன்று அய்யன்கொல்லி அருகே முருக்கம்பாடி வட்டக்கொல்லி பகுதியில் இருதயதாஸ் என்பவரது வீடு மழைக்கு இடிந்தது. முன்னதாக அவர் குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறியதால் உயிரிழப்புதவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story