பரிசோதனையில் தாமதமாவதால் பயணிகள் போராட்டம்: குமரிக்கு பஸ்சில் வருகிறவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை
குமரிக்கு பஸ்சில் வருகிறவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மட்டும் நடத்தப்படும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கூறினார்.
ஆரல்வாய்மொழி,
கொரோனா பரிசோதனையில் தாமதம் ஆனதால் பயணிகள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையின் போது, குமரிக்கு பஸ்சில் வருகிறவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மட்டும் நடத்தப்படும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கூறினார்.
கொரோனா பரிசோதனை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு வரும் பயணிகள் ஆரல்வாய்மொழியில் தடுத்து நிறுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி, கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் வருகிறவர்களை ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரிக்கு அழைத்து சென்று சளி, மாதிரிகளை சேகரித்த பின்பு கன்னியாகுமரியில் உள்ள விடுதிகளுக்கு தனிமைப்படுத்த அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அரசு பஸ்களில் வருகிறவர்களை ஜெயமாதா என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு சென்று பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சளி மாதிரிகள் சேகரித்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின்பு அவர்கள் மீண்டும் பஸ்களில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு கொரோனா பரிசோதனை செய்யும் போது பல மணி நேரம் காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் அவதியடைந்து வந்தனர்.
பஸ் பயணிகள் போராட்டம்
இந்தநிலையில், திருநெல்வேலியில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த 7 அரசு பஸ் நேற்று பகல் 11 மணியளவில் கொரோனா பரிசோதனைக்காக ஜெயமாதா என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை செய்யும்படி டிரைவர், கண்டக்டர் தெரிவித்தனர்.
அந்த பஸ்களில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் கல்லூரி வளாகத்தில் கொரோனா பரிசோதனைக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாக காத்திருந்ததால் வெறுப்படைந்த பயணிகள் திடீரென போராட்டம் நடத்துவதற்காக சாலையை நோக்கி புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செலஸ்டின் மற்றும் போலீசார் பயணிகளை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கோட்டாட்சியர் மயில் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பரிசோதனை என்ற பெயரில் தாங்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதாகவும், இதனால் தங்களின் அன்றாட பணிகள் முடங்குவதாகவும் பயணிகள் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மாவட்ட கலெக்டரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கலந்தாலோசித்தார். அப்போது, பயணிகள் அனைவருக்கும் முதற்கட்டமாக தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்துவதும் என்றும், அதில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு சளி மாதிரிகள் சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்வது என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து விட்டு அனுப்பி வைத்தனர். நேற்று மதியத்திற்கு பின்பு பஸ்களில் வந்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டது. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story