‘சிம்மனகட்டி வாழ்க’ என்று சொல்லுங்கள் எனக்கூறி மனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் - சித்தராமையா கிண்டல்


‘சிம்மனகட்டி வாழ்க’ என்று சொல்லுங்கள் எனக்கூறி மனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் - சித்தராமையா கிண்டல்
x
தினத்தந்தி 5 Jun 2020 6:06 AM IST (Updated: 5 Jun 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

‘சிம்மனகட்டி வாழ்க‘ என்று சொல்லுங்கள் எனக்கூறி மனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கிண்டலடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகல்கோட்டை,

கர்நாடக மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா கர்நாடகத்தில் நடந்த கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியிலும், பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் அவர் பாதாமி தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றார். இதையடுத்து அவ்வப்போது அவர் பாதாமி தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார். மேலும் அங்குள்ள அரசு அதிகாரிகளை சந்தித்து தொகுதி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சித்தராமையா பாதாமிக்கு சென்றார். அப்போது அவருடைய காரை மலைவாழ் பெண்கள் வழிமறித்து தங்களுக்கு வீடுகள் இல்லை எனவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருவதாகவும், அதனால் தாங்கள் வசித்து வரும் பகுதியை தங்களுக்கே பட்டா செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் மனுவும் கொடுத்தனர்.

அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட சித்தராமையா, “இதை என்னிடம் கேட்காமல் இத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான பொம்மனகட்டியிடம் கேட்கலாமே. மேலும் இத்தொகுதியில் தண்ணீர் பிரச்சினையும் உள்ளது. அதையும் அவரிடமே கேளுங்கள். என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்“ என்று கூறியதாக தெரிகிறது. மேலும் அவர் முன்னாள் எம்.எல்.ஏ. பொம்மனகட்டியை கிண்டல் செய்யும் வகையில் மலைவாழ் பெண்களிடம், “சிம்மனகட்டி வாழ்க என்று கூறுங்கள், எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீரும் தாருங்கள்“ எனக்கூறி கிண்டலடித்தார்.

அதைக்கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். இதனால் சித்தராமையாவிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் சித்தராமையா அவர்கள் கொடுத்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

இதற்கிடையே சித்தராமையா, மலைவாழ் பெண்களிடம் கிண்டலடித்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு ஒரு முன்னாள் முதல்-மந்திரியே இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று பலர் சித்தராமையாவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Next Story