கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ரூ.3¾ கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு


கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ரூ.3¾ கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு
x
தினத்தந்தி 5 Jun 2020 6:12 AM IST (Updated: 5 Jun 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ரூ.3¾ கோடி செலவில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ரூ.3¾ கோடி செலவில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

முக்கடல் சங்கமம்

கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய 3 கடல்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. இந்த முக்கடல் சங்கமத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். அதுமட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு இந்த முக்கடல் சங்கமத்தில் புனித நீராடுவார்கள்.

படித்துறை வசதி

அதன்பிறகுதான் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் கோவில் கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம், திருவிழாக்கள் மற்றும் புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கும் இங்கு இருந்து கடல் தீர்த்தம் எடுத்து செல்வார்கள். அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த இந்த முக்கடல் சங்கமம் பராமரிக்கப்படாமலும் பாறைகள் நிறைந்தும் காணப்பட்டது. இங்கு புனித நீராடுவதற்கான படித்துறை வசதிகளும் இல்லாமல் இருந்தது.

இதனால் முக்கடல் சங்கமத்தில் புனித நீராட வரும் பக்தர்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறையில் அடிபட்டு ரத்தகாயத்துடன் எழுந்து செல்லும் அவல நிலை இருந்து வந்தது.

ரூ.3¾ கோடி செலவில்...

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்கான படித்துறை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக படித்துறை வசதியும், புனித நீராடிய பெண்கள் உடை மாற்ற அறை, வை-பை வசதி மற்றும் சூரிய உதயத்தை காண வருபவர்களுக்கு இருக்கை வசதி என ரூ.3 கோடியே 84 லட்சம் செலவிலான வளர்ச்சி பணிகளை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த பணிகளை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது குமரி மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யாஅரி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story