திண்டுக்கல் மாவட்டத்தில் தம்பதி உள்பட மேலும் 6 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் தம்பதி உள்பட மேலும் 6 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் தம்பதி உள்பட மேலும் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
திண்டுக்கல் மாவட்டம், செந்துறையை அடுத்த சின்னக்குளம் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர். இவர் மராட்டியம் மாநிலம் புனேவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். ஊரடங்கு காரணமாக அவர், அவருடைய மனைவி மற்றும் தந்தை ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புனேவில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் சொந்த ஊருக்கு திரும்பிய 3 பேருக்கும், சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். பரிசோதனை முடிவில் 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாணவி, குழந்தை
சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி, கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் தனது தாயுடன் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தாள். அவளுடைய தந்தை மட்டும் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தாயும், மகளும் சென்னைக்கு சென்றனர். பின்னர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வாங்குவதற்காக அந்த மாணவி வாடகை காரில் கொடைக்கானலுக்கு வந்தாள். முன்னதாக நேற்று முன்தினம் அய்யலூர் சோதனை சாவடியில் அந்த மாணவி, அவளுடைய தாய்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதேபோல் இலங்கையில் இருந்து சின்னாளபட்டிக்கு வந்த 40 வயது நபர் மற்றும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட கள்ளிமந்தையத்தை சேர்ந்த 45 வயது வியாபாரியின் 3 வயது பெண் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Related Tags :
Next Story