ஒரு நாளில் அதிகபட்ச இறப்பு: கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி - புதிதாக 257 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி


ஒரு நாளில் அதிகபட்ச இறப்பு: கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி - புதிதாக 257 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
x
தினத்தந்தி 5 Jun 2020 6:18 AM IST (Updated: 5 Jun 2020 6:18 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள். புதிதாக 257 பேர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

பெங்களூரு,

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்குதலை தொடுத்துள்ளது.

இந்தியாவில் மராட்டிய மாநிலம் கொரோனா வைரசால் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. அங்கு கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் கொரோனா வைரசின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. தற்போது மராட்டியம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் வைரஸ் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இதுவரையில் 59 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா வைரஸ் பாதிப்பால் 4 பேர் பலியாகி இருக்கிறார்கள். புதிதாக 257 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 4,008 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் புதிதாக 257 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் ஆவார். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,265 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு நேற்று 4 பேர் பலியாகி உள்ளனர்.

அதாவது பெங்களூருவை சேர்ந்த 65 வயது மற்றும் 60 வயது மூதாட்டிகள், கதக்கை சேர்ந்த 44 வயது நபர், தாவணகெரேயை சேர்ந்த 83 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தவர்களில் உடுப்பியில் 92 பேர், பெங்களூரு நகரில் 9 பேர், ராய்ச்சூரில் 88 பேர், மண்டியாவில் 15 பேர், பெலகாவியில் 12 பேர், ஹாசனில் 15 பேர், தாவணகெரேயில் 13 பேர், சிக்பள்ளாப்பூரில் 2 பேர், தட்சிண கன்னடாவில் 4 பேர், விஜயாப்புரா, மைசூரு, பல்லாரி, துமகூரு, ஹாவேரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர், கதக்கில் 2 பேர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 12 ஆயிரத்து 268 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 37 ஆயிரத்து 733 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 1,610 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,651 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் மட்டும் 13 பேர் உள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் நேற்று உடுப்பியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 92 பேரும் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராய்ச்சூரில் பாதிப்புக்கு உள்ளான 88 பேரில் 7 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள் என்றும், 81 பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் சுகாதார துறையினர் கண்டறிந்து உள்ளனர். மேலும் ராய்ச்சூரில் பாதிப்புக்கு உள்ளான 88 பேரில் 30 பேருக்கு ஒரே நபரிடம் இருந்து வைரஸ் தொற்று பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநில தலைநகரான பெங்களூருவில் நேற்று வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவுக்கு ஒரேநாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு வெளிமாநிலங்களுக்கு பஸ்களை இயக்க மாநில அரசு ஆயத்தமாகி வரும் நிலையில் ஒரேநாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கொரோனா பாதிப்புடன் சாவு எண்ணிக்கையும் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story