நெல்லை மாவட்டத்தில் 1,851 பயனாளிகளுக்கு கொரோனா சிறப்பு நிதி உதவி கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் 1,851 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஷில்பா கூறிஉள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் 1,851 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஷில்பா கூறிஉள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஊரக புத்தாக்க திட்டம்
தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை மற்றும் வள்ளியூர் ஆகிய 4 யூனியன்களை சேர்ந்த 102 பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் பஞ்சாயத்துகளில் சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களை சார்ந்தவர்களால் நடத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊரக தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதார தொழிலை மேம்படுத்துவதற்காகவும், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் தொழில்களின் மூலம் வளமும், வலிமையும் பெறுவதற்காகவும், பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்கவும், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் ரூ.300 கோடியில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் முதல்-அமைச்சரால் கடந்த 28-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
ரூ.8.41 கோடி
அந்த சிறப்பு நிதி உதவி தொகுப்பின் மூலம் நெல்லை மாவட்டத்தில் ரூ.8.41 கோடி மதிப்பில் 1,851 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு செயல்படுத்தப்பட உள்ளது. 816 பேருக்கு, தலா ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் என்ற அடிப்படையில் ரூ.4.08 கோடி நீண்டகால தனிநபர் தொழில் கடனாக பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும்.
41 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 1,025 பேர் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக ஒரு குழுவுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.61.50 லட்சம் வழங்கப்படும். குழு ஒன்றுக்கு 5 பயனாளிகள் அடங்கிய 8 தொழில் குழுக்களுக்கு (ஆடை தயாரிப்பு, பால் பொருட்கள் உற்பத்தி, கலைப்பொருட்கள் உற்பத்தி போன்றவை) தலா 5 நபர்களுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் ஒருமுறை மூலதன மானியமாக வழங்கப்படும்.
புலம் பெயர்ந்தவர்கள்
புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன் பெற்றவர்களில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1.67 கோடி நீண்டகால கடனாக வழங்கப்படும். ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்பு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு 500 பேர் வீதம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.30 லட்சம் மூலதன மானியமாக வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டுக்காக 816 பேரை தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் என்ற அடிப்படையில் நிதி வழங்குவதற்காக ரூ.1.63 கோடி நீண்டகால கடனாக வழங்கப்படும்.
தொடர்பு கொள்ளலாம்
இந்த திட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் ராதாபுரம் ஆகிய 4 யூனியன்களுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் செயல்பட்டு வரும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் நம்பர் 25, பெருமாள்புரம், மெயின் ரோடு, நெல்லை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் மாவட்ட ஊரக புத்தாக்க திட்ட அலுலகத்தை நேரிலும், 0462-2904211 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story