ஒன்றிய அலுவலகங்கள் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.7,500 வீதம் 3 மாதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்கள் பணி வழங்க வேண்டும். இந்த பணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 வீதம் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோன்று தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேனி தாலுகா செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். பெரியகுளத்தில் தாலுகா தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் தயாளன் தலைமையிலும், கம்பத்தில் தாலுகா தலைவர் காஜாமைதீன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அந்தந்த பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story