திருச்சியில் டிபன் கடைக்காரரை தாக்கிய ரவுடி கைது
திருச்சியில் டிபன் கடைக்காரரை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
திருச்சி,
திருச்சியில் டிபன் கடைக்காரரை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
ரவுடி கைது
திருச்சி பொன்நகரை சேர்ந்த சித்திக்ரகுமான்(வயது 25) திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கருமண்டபத்தை சேர்ந்த ரவுடி முத்தமிழ்குமரன்(31) பார்சல் சாப்பாடு வாங்கிவிட்டு பணம் கொடுக்கவில்லை. இதுபற்றி கேட்ட சித்திக்ரகுமானை அவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ரவுடி முத்தமிழ்குமரனை திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர்.
தம்பதியை தாக்கியவர் கைது
* அரியலூர் மாவட்டம் எருதுகாரன்பட்டியை சேர்ந்த பெரியசாமி-தேவி தம்பதி திருச்சி மேலபஞ்சப்பூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து(35) குடிபோதையில் இருவரையும் அவதூறாக பேசி இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.
* மேலப்பஞ்சப்பூரை சேர்ந்த கருப்பையாவை(25) தாக்கி மூக்கை உடைத்ததாக அதே பகுதியை சேர்ந்த கவுதம், நந்தா, சிவகுமார், மாரிமுத்து ஆகியோரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர்.
பணம் பறித்தவர் கைது
* திருச்சி உறையூரை சேர்ந்த பாஸ்கரிடம்(43) கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,500 பறித்ததாக கார்த்திக்கை(34) உறையூர் போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
* பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தொழிலாளர் யூனியன் சார்பில் திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
* ஊரடங்கு உத்தரவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், ஏழைகளிடம் தவறாக பேசி கடன் தொகையை செலுத்த நெருக்கடி கொடுக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மக்கள் அதிகாரம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மணல் கடத்திய 2 பேர் கைது
* திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தி வந்ததாக அரியலூர் மாவட்டம் கோவிலூரை சேர்ந்த காமராஜ்(35), திருவையாறை சேர்ந்த கோவிந்தராஜ்(25) ஆகியோரை கல்லக்குடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 யூனிட் மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
* திருச்சி மாவட்டத்தில் எலிகளை கொல்லும் பசையை (விஷம்) விற்பனைக்காக வைத்திருந்த 112 கடைகளின் உரிமையாளர்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விடுதி உரிமையாளர் கைது
* சமயபுரத்தில் உள்ள வேலவன் லாட்ஜ் என்ற தங்கும் விடுதியில் வெளியூரை சேர்ந்த 3 இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக விடுதி உரிமையாளர் ஜெயக்குமாரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விடுதி மேலாளர் முத்துவை போலீசார் தேடி வருகிறார்கள். விடுதியில் இருந்து மீட்கப்பட்ட 3 இளம் பெண்கள் திருச்சியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி
* மணப்பாறையில் திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 55 வயது ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார், அந்த நபரின் உடலை கைப்பற்றி அவர்யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story