நடப்பு ஆண்டில் டெல்டா விவசாயிகளுக்கு ரூ.2,564 கோடி பயிர்க்கடன் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்


நடப்பு ஆண்டில் டெல்டா விவசாயிகளுக்கு ரூ.2,564 கோடி பயிர்க்கடன் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
x

நடப்பு ஆண்டில் டெல்டா விவசாயிகளுக்கு ரூ.2,564 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

திருச்சி, 

நடப்பு ஆண்டில் டெல்டா விவசாயிகளுக்கு ரூ.2,564 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை வருகிற 12-ந்தேதி திறக்கப்பட இருப்பதையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பயிர்க்கடன், இடு பொருட்கள், உரம் வினியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரூ.2,564 கோடி பயிர்க்கடன்

நடப்பு ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் ரூ.2,564 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட உள்ளது. இதில் கடந்த மாதம் 22-ந்தேதி வரை ரூ.43 கோடியே 88 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான சுமார் 30 ஆயிரம் டன் உரம் கையிருப்பில் உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இதுவரை விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் ரூ.51 ஆயிரத்து 306 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 94 லட்சத்து 83 ஆயிரத்து 206 விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். சிறு தொழில் செய்பவர்களுக்கு குடும்ப அட்டையை ஆதாரமாக கொண்டு ரூ.50 ஆயிரம் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடன் வழங்க எந்த நிபந்தனையும் கிடையாது.

வேண்டுகோள்

அடுத்த மாதமும் ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்கள் வழங்கப்படுமா? என கேட்கிறீர்கள். இந்த மாத இறுதிக்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என இந்த அரசு நினைக்கிறது. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் முழு அளவு அரிசியையும், உதாரணத்திற்கு 40 கிலோ பெற தகுதி உள்ளவர் என்றால், அதனை ஒரே நேரத்தில் வாங்கி செல்லவேண்டும். ரேஷன் கடைகளில் தரமான அரிசி தான் வழங்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் இந்த அரிசியின் விலை ஒரு கிலோ ரூ.40 ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் கரூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பணியிடை நீக்கம்

முன்னதாக திருச்சி பொன்மலைப்பட்டியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 74-வது கிளையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் சுப்பிரமணியபுரத்தில் ஒரு ரேஷன் கடையை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அந்த கடையின் பணியாளரிடம் காணப்பட்ட குறைபாடுகளுக்காக அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

Next Story