கொரோனா தனிமை வார்டில் தன்னை ‘டிஸ்சார்ஜ்’ செய்யக்கோரி கத்தியை காட்டி டாக்டர்களை மிரட்டியவர் கைது


கொரோனா தனிமை வார்டில் தன்னை ‘டிஸ்சார்ஜ்’ செய்யக்கோரி கத்தியை காட்டி டாக்டர்களை மிரட்டியவர் கைது
x

சேலம் அரசு ஆஸ்பத்திரியில், கொரோனா தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்த நபர் தன்னை ‘டிஸ்சார்ஜ்’ செய்யக்கோரி கத்தியை காட்டி டாக்டர்களை மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வார்டில் சேலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என 170-க்கும் மேற்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அப்போது அவர் திடீரென பழங்களை வெட்டும் கத்தியை காட்டி டாக்டர்களை மிரட்டி தன்னை உடனடியாக ‘டிஸ்சார்ஜ்’ செய்யுமாறு கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் அவரிடம் நைசாக பேசி கத்தியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் டாக்டர்கள் இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் டாக்டர்களை மிரட்டியவர் மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தல், தொற்று நோயை பரப்புதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்ட அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Next Story