ஊரடங்கினால் வைகாசி விசாக திருவிழா ரத்து முருகன் கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டது
ஊரடங்கினால் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டதையடுத்து முருகன் கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
பெரம்பலூர்,
ஊரடங்கினால் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டதையடுத்து முருகன் கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
வைகாசி விசாக திருவிழா
ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா முருகன் கோவில்களில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு தற்போதும் நடைமுறையில் உள்ளது. அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. ஆனால் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதியே மூடப்பட்டன. இதனால் கோவில்களில் பங்குனி உத்திரம், சித்திரை திருவிழா உள்ளிட்டவைகளும் நடத்த தடை விதிக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது. தற்போது வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் வைகாசி விசாக திருவிழா முருகன் கோவில்களில் நேற்று நடைபெறவில்லை. இதனால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள முருகன் கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டு, வழக்கமான பூஜைகள் மட்டும் பக்தர்களின்றி நடத்தப்பட்டது. கோவில் நடை திறக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று முருகனை வழிபட்டனர். பக்தர்களில் பலர் தங்களது வீடுகளில் வைக்கப்பட்டுள்ள முருகன் உருவப்படத்தை தரிசனம் செய்தனர்.
சிறப்பு அபிஷேகம்
இதேபோல் பக்தர்களின்றி பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பாலமுருகன் சன்னதி, குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியர் சன்னதியில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்தப்பட்டது. இதனால் வைகாசி விசாக திருவிழா களையிழந்து காணப்பட்டது.
அரியலூரில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி கோவிலில் உள்ள முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஆனால் கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்தரநாயகி சமேத பசுபதீஸ்வரர் சுவாமி, அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story