நலவாரிய அலுவலகத்தில் புதுப்பித்தல் விண்ணப்பங்களை வாங்க மறுக்கிறார்கள் ஏ.ஐ.டி.யு.சி. குற்றச்சாட்டு


நலவாரிய அலுவலகத்தில்  புதுப்பித்தல் விண்ணப்பங்களை வாங்க மறுக்கிறார்கள் ஏ.ஐ.டி.யு.சி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Jun 2020 11:13 AM IST (Updated: 5 Jun 2020 11:13 AM IST)
t-max-icont-min-icon

நலவாரிய அலுவலகத்தில் புதுப்பித்தல் விண்ணப்பங்களை வாங்க மறுக்கிறார்கள் என்று ஏ.ஐ.டி.யு.சி. குற்றச்சாட்டு கூறியுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன்(ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் முலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால் பெரும் துன்பத்தில் சிரமப்பட்டுவருகிறார்கள். இதுபோல் 60 வயது நிறைவடைந்து ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. இதுபோன்ற விண்ணப்பங்கள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்படுகிறது.

கல்வி, திருமணம், பிரசவம்,இயற்கை மரணம் உள்ளிட்ட கேட்பு மனுக்களுக்கும் பணப்பலன்கள் வழங்கப்படாமல் ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளன. கொரோனா நிவாரணமாக கட்டுமானம், ஆட்டோ மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்தவர்களுக்கு அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் முழுமையாக வழங்கப்படவில்லை. நலவாரியத்தில் பதிவு செய்து புதுப்பிக்காதவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் நலவாரிய அலுவலகத்துக்கு புதுப்பிக்க செல்கிறார்கள். புதிதாக உறுப்பினராக சேர்வதற்கும் விண்ணப்பிக்க செல்கிறார்கள். ஆனால் நலவாரிய அலுவலகத்தில் புதுப்பித்தல் மற்றும் பதிவு விண்ணப்பங்களை வாங்க மறுக்கிறார்கள். நலவாரியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண கண்காணிப்புக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story