செந்துறை அருகே பரிதாபம்: அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி சாவு


செந்துறை அருகே பரிதாபம்: அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 5 Jun 2020 11:37 AM IST (Updated: 5 Jun 2020 11:37 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

செந்துறை, 

செந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிறுவன்-சிறுமி

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுடைய மகள் பிருந்தா (வயது 10), மகன் கிரிதரன் (8). இருவரும் செந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை அக்காளும், தம்பியும் வீட்டின் அருகே உள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது வெயில் நேரம் என்பதால் பிருந்தா தனது தம்பியை அழைத்துச்சென்று குளத்தின் கரையில் குளித்துக்கொண்டு இருந்தாள். அப்போது அங்கு ஏற்கனவே ஆழமாக வெட்டப்பட்டு இருந்த பள்ளத்தில் வழுக்கி விழுந்த சிறுவன் கிரிதரன், தண்ணீரில் மூழ்கி உள்ளான். இதனைக்கண்ட பிருந்தா தம்பியை காப்பாற்ற முயன்றாள். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர்.

குளத்தில் மூழ்கி சாவு

இதனை அவ்வழியே அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் பார்த்து விட்டார். அவர் உடனே பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, 2 பேரையும் குளத்தில் இருந்து மீட்டு பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே டாக்டர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்து செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். செந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும் நீண்டநேரம் போராடியும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அதனைத்தொடர்ந்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொன்குடிக்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story