தென்காசி மாவட்டத்தில் 895 பயனாளிகளுக்கு கொரோனா சிறப்பு நிதி உதவி - கலெக்டர் தகவல்


தென்காசி மாவட்டத்தில் 895 பயனாளிகளுக்கு கொரோனா சிறப்பு நிதி உதவி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 Jun 2020 10:45 PM GMT (Updated: 5 Jun 2020 7:49 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் 895 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்து உள்ளார்.

தென்காசி,

தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர், கடையம் ஆகிய வட்டாரங்களில் ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் சுயஉதவிக்குழு உறுப்பினர், உறுப்பினர் குடும்பங்களை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊரக தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதார தொழிலை மேம்படுத்துவதற்காகவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் தொழில்களின் மூலம் வளமும், வலிமையும் பெறுவதற்காகவும், பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்கிடவும், ரூ.300 கோடியில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

அந்த சிறப்பு நிதி உதவி தொகுப்பின் மூலம் தென்காசி மாவட்டத்தில் ரூ.4.66 கோடி மதிப்பில் 895 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு செயல்படுத்தப்பட உள்ளது.

352 பேருக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.1.76 கோடி நீண்டகால தனிநபர் தொழில்கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும்.

18 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 540 பேர் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.27 லட்சம் வழங்கப்படும்.

5 பயனாளிகள் அடங்கிய 4 தொழில் குழுக்களுக்கு (ஆடை தயாரிப்பு, பால்பொருட்கள் உற்பத்தி, கலைப்பொருட்கள் உற்பத்தி போன்றவை) தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் ஒரு முறை மூலதன மானியமாக வழங்கப்படும்.

புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன் பெற்றவர்களில் வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.67 கோடி நீண்டகால கடனாக வழங்கப்படும்.

ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு/உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 500 நபர்கள் வீதம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் மூலதன மானியமாக வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக 352 பேரை தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் என்ற அடிப்படையில் நிதி வழங்குவதற்காக மொத்தம் ரூ.71 லட்சம் நீண்ட கால கடனாக வழங்கப்படும்.

மேற்கண்ட பயன்களை பெற இத்திட்டத்தின் கீழப்பாவூர் மற்றும் கடையம் ஆகிய 2 வட்டாரங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் வட்டார அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை நேரிலும், 0462-2904211 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story