கோவை ரத்தினபுரியில் வீட்டு வாடகை கேட்ட மூதாட்டியை அரிவாளை காட்டி மிரட்டிய பெண்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாக பரவுகிறது


கோவை ரத்தினபுரியில் வீட்டு வாடகை கேட்ட மூதாட்டியை அரிவாளை காட்டி மிரட்டிய பெண்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாக பரவுகிறது
x
தினத்தந்தி 6 Jun 2020 3:26 AM IST (Updated: 6 Jun 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

கோவை ரத்தினபுரியில் வீட்டு வாடகை கேட்ட மூதாட்டியை பெண்கள் 2 பேர் அரிவாளை காட்டி மிரட்டினார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கணபதி,

கோவை ரத்தினபுரி, கல்கி வீதியை சேர்ந்தவர் மரியபிரகாசம். இவருடைய மனைவி ஞானமேரி (வயது 70). இவர்களது வீட்டில் சகுந்தலா, ஜெயா ஆகியோர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியேறினார்கள். அப்போது ரூ.20 ஆயிரம் முன்பணமாகவும், ரூ.5 ஆயிரத்து 500 வாடகை கொடுக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது.

அதற்கு அவர்கள் ரூ.10 ஆயிரம் மட்டும் முன்பணம் கொடுத்ததாக தெரிகிறது. முன்பணத்தை தொடர்ந்து கேட்டதால் வீட்டை காலி செய்வதாக அவர்கள் 2 பேரும் கூறினார்கள். இதற்கிடையே கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவர்களால் வீட்டை காலி செய்ய முடியவில்லை.

அரிவாளை காட்டி மிரட்டல்

அத்துடன் அவர்கள் வீட்டு வாடகையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே வீட்டுவாடகை மற்றும் ஏற்கனவே கொடுக்க வேண்டிய முன்பணத்தை வாங்குவதற்காக ஞானமேரி சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர் பணத்தை வாங்காமல் திரும்பி சென்றார்.

சம்பவத்தன்று மீண்டும் அவர் பணத்தை கேட்க சென்றபோது சகுந்தலா, ஜெயா ஆகியோர் வாடகை கேட்டு வந்தால் கொன்றுவிடுவோம் என்று அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன ஞானமேரி அங்கிருந்து சென்றுவிட்டார்.

வைரலாக பரவுகிறது

இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சகுந்தலா, ஜெயா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வாடகை கேட்டு போன மூதாட்டி ஞானமேரியை சகுந்தலா, ஜெயா ஆகியோர் அரிவாளை காட்டி மிரட்டியதை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Next Story