கூடலூர், பந்தலூரில் காட்டுயானைகள் அட்டகாசம்
கூடலூர், பந்தலூரில் காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
கூடலூர்,
கூடலூர் தாலுகா கிளன்வன்ஸ் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் கதவை உடைத்து குட்டிகளுடன் 5 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து மேசை, பீரோ உள்ளிட்ட பொருட் களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஓவேலி வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அந்த பள்ளிக்குள் புகுந்து 2-வது முறையாக காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குந்தலாடி பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் அங்குள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்தன. தொடர்ந்து பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை தின்றன. மேலும் செளுக்காடி பகுதிக்குள் தினமும் காலையில் காட்டுயானை ஒன்று உலா வருகிறது. மேலும் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களையும் தின்று சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story