மாநிலங்களவை தேர்தல்: கர்நாடக காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே போட்டி சோனியா காந்தி அறிவிப்பு


மாநிலங்களவை தேர்தல்: கர்நாடக காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே போட்டி சோனியா காந்தி அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2020 5:34 AM IST (Updated: 6 Jun 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவை தேர்தலில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவார் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கர்நாடகத்திற்கான 4 இடங்கள் இந்த மாதத்தில் காலியாகின்றன. இந்த 4 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் பா.ஜனதாவுக்கு 2, காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைப்பது உறுதி. மீதமுள்ள ஒரு இடத்திற்கு தேவைப்படும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை எந்த கட்சியிடமும் இல்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சியிடம் தற்போது 34 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்த கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் இன்னும் 14 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

காங்கிரசுக்கு ஒரு இடத்திற்கு தேவையான 48 எம்.எல்.ஏ.க்கள் போக மீதம் 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதனால் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும். ஜனதா தளம்(எஸ்) சார்பில் தேவேகவுடா போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது.

ஆனால் தேவேகவுடா, இனி தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர், அவர் மாநிலங்களவை எம்.பி. ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். தேவேகவுடா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மனு தாக்கல் செய்ய வருகிற 9-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அறிவித்துள்ளார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் போட்டியிட்டு பா.ஜனதா வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதுவரை தோல்வியையே சந்திக்காத சாதனைக்கு சொந்தக்காரராக இருந்த அவர் முதல் முறையாக அந்ததேர்தலில் தோல்வியை தழுவினார்.

அவர் நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக செயலாற்றியபோது, தனது ஆக்ரோஷமான பேச்சால், மத்திய அரசின் தோல்விகளை, குறைகளை எடுத்து வைத்து ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்தார். அவரது பேச்சு சோனியா காந்தி உள்பட அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் நுழைகிறார். அங்கும் அவர் மத்திய அரசின் தவறுகளை எடுத்துரைத்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story