எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம் கலெக்டர் தகவல்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும்  மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம்  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2020 12:46 AM GMT (Updated: 6 Jun 2020 12:46 AM GMT)

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஹால் டிக்கெட்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் வருகிற 15-ந் தேதி முதல் மீண்டும் நடைபெற உள்ளது. மேலும் மார்ச் மாதம் 24-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில், ஊரடங்கு காரணமாக பங்கேற்க முடியாத மாணவ-மாணவிகளுக்கு வருகிற 18-ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் முதல் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

நாளை மறுநாள்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 9-ந்தேதி ஆகிய நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

அப்போது தலா 2 முக கவசங்களும், தேர்வு நாளன்று ஒரு முக கவசமும் வழங்கப்படும். இதேபோல் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு நடத்தப்படும் நாளில் மாணவ-மாணவிகளுக்கும் தலா ஒரு முக கவசம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story