குமரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ நெருங்கியது


குமரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ நெருங்கியது
x
தினத்தந்தி 6 Jun 2020 6:32 AM IST (Updated: 6 Jun 2020 6:32 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 99 ஆக உயர்ந்து, 100-ஐ நெருங்கியது.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 99 ஆக உயர்ந்து, 100-ஐ நெருங்கியது.

கொரோனா

குமரி மாவட்டத்துக்குள் வருபவர்களுக்கு ஆரல்வாய்மொழி மற்றும் களியக்காவிளை பகுதியில் தடுத்து சளி மற்றும் ரத்தம் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வெளியில் இருந்து வருபவர்களால் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக இருந்தது.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் வந்த மெதுகும்மல் பகுதியை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும், அவருடைய 13 வயது மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று தாய் மற்றும் மகளை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொரோனா வார்டில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்பத்தினருக்கு பரிசோதனை

தாய் -மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மெதுகும்மல் பகுதியில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தாயும், மகளும் சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து ரெயிலில் நாகர்கோவில் வந்தனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவர்களுடன் ரெயிலில் பயணம் செய்தவர்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்களுக்கும் நோய்த்தொற்று இருக்குமோ? என்ற சந்தேம் எழுந்துள்ளது.

எனவே 3-ந் தேதி திருச்சி ரெயிலில் தாய்-மகள் பயணம் செய்த பெட்டியில் இருந்த பயணிகள் மற்றும் சென்னையில் இருந்து காரில் அழைத்து வந்தவர் பற்றிய விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

100-ஐ நெருங்கியது

இந்த நிலையில் ஆரல்வாய்மொழி சோதனை சாவடி வழியாக வந்த ரீத்தாபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல களியக்காவிளை வழியாக வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து 7 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் குமரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பூரண குணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 4 பேரும் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குமரி மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்து 100-ஐ நெருங்கி உள்ளது.

Next Story