புதுக்கடை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
புதுக்கடை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் அடிப்படையில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்,
புதுக்கடை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் அடிப்படையில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது. இது குறித்த தகவல் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரியின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
மேலும், குளச்சல் மகளிர் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன.
பண ஆசை காட்டி...
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வேலை தொடர்பாக தினமும் வெளியூர் சென்று வந்துள்ளார். தாயார் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதனால், சிறுமி தகுந்த பாதுகாப்பு இன்றி தனியாக சுற்றி திரிந்துள்ளார்.
இதை சாதகமாக பயன்படுத்தி அதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்பட 6 பேர் சிறுமிக்கு பண ஆசை காட்டியும், தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தும் அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.
6 பேர் கைது
இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த முகமது நூகு (வயது 68), அப்துல் ஜெப்பார் (60), சகாயதாஸ் என்கிற பிரைட், ஜாகீர் உசேன் மற்றும் 14, 15 வயதுடைய 2 சிறுவர்கள் என 6 பேரை கைது செய்து குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த 6 பேர் மீதும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோர்டில் ஆஜர் படுத்தினர். பின்னர், கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களும் நாங்குநேரியில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகமது நூகு உள்பட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தகுந்த பாதுகாப்பு இன்றி வளர்ந்த சிறுமிக்கு பண ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story