2-ம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வந்தன கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டன ஆட்டோ, டாக்சிகளும் ஓடின


2-ம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வந்தன கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டன ஆட்டோ, டாக்சிகளும் ஓடின
x
தினத்தந்தி 6 Jun 2020 6:52 AM IST (Updated: 6 Jun 2020 6:52 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் 2-ம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வந்ததன் மூலம் மும்பையில் கடைகள், சந்தை பகுதிகள் திறக்கப்பட்டன. ஆட்டோ, டாக்சிகளும் ஓடின.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் 22-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது 5-வது முறையாக ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மராட்டியத்தில் இயல்பு நிலை திரும்பும் வகையில் மாநில அரசு கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது.

இதில் கடந்த 3-ந் தேதி பொது மக்கள் காலை 5 மணி முதல் 7 மணி வரை கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஒர்க் ஷாப் செயல்படவும், பிளம்பர், எலெக்ட்ரீசியன் போன்றவர்கள் பணி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. இதுதவிர 15 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின.

இந்தநிலையில் நேற்று மும்பை உள்பட மாநிலம் முழுவதும் 2-ம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதன்படி மாநிலம் முழுவதும் மார்க்கெட் பகுதிகள், அனைத்துவிதமான கடைகளும் திறக்கப்பட்டன. வணிக வளாகங்களில் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

மும்பையில் சாலையில் ஒருபுறம் உள்ள கடைகள் ஒருநாளும், அடுத்த நாள் எதிர்புறமும் உள்ள கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் தாதர், அந்தேரி, மலாடு, சயான், மாட்டுங்கா, மஜித் பந்தா் உள்ளிட்ட பகுதிகளில் செருப்பு, துணிக்கடைகள், வாட்ச் கடைகள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் திறந்து இருந்தன. ஜவேரி பஜாரில் நகை கடைகளும் திறக்கப்பட்டன. எனினும் மும்பையில் நேற்று 30 சதவீத கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. பல சந்தை பகுதிகள் வெறிச்சோடியே காணப்பட்டன.

இதுகுறித்து தாதரில் துணிக்கடை நடத்தி வரும் சாகர் என்பவர் கூறுகையில், ''கடைகள் திறப்பது குறித்து மாநகராட்சியிடம் இருந்து முறையான வழிகாட்டுதல் எதுவும் வழங்கப்படவில்லை. நாங்கள் எந்த நாள் கடை திறக்க வேண்டும் என்று கூட தெரியாது. இதுபோன்ற குழப்பங்களால் தான் பெரும்பாலான கடைகள் திறக்கவில்லை. இன்னும் ஓரிருநாட்களில் நிலைமை சரியாகும் என நம்புகிறோம். பொது மக்கள் கூட்டமும் இல்லை. நாட்கள் செல்ல, செல்ல தான் மக்களும் கடைகளுக்கு வரத் தொடங்குவார்கள்’’ என்றார்.

இதேபோல பொருட்கள் வாங்க வந்த சாகித் கூறுகையில், ‘‘எனது செருப்பு அறுந்துபோய் 2 மாதம் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்கள் செருப்பு இல்லாமல் எப்படி இருந்தேன் என்று கூட தெரியவில்லை. கடைகள் திறக்கப்பட்டதால் இன்று வாங்கிவிட்டேன்’’ என்றேன்.

மும்பையில் அத்தியாவசிய தேவைகளுக்காக நேற்று முதல் ஆட்டோ, டாக்சிகளும் டிரைவர் உள்பட 3 பேருடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. எனினும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகளில் குறைந்த எண்ணிக்கையில் தான் ஆட்டோ, டாக்சிகள் இயங்கின.

எனினும் மும்பை, தானே, ராய்காட், பால்கர் பகுதிகளை உள்ளடக்கிய மும்பை பெருநகர பகுதிக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கனரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்வதையும் காண முடிந்தது.

மும்பையை போல நேற்று தானே, நவிமும்பை, வசாய் போன்ற பகுதிகளிலும் எல்லா விதமான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

Next Story