கேரளாவில் தங்கியுள்ள 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை அழைத்து வர சிறப்பு ஏற்பாடு முதன்மை கல்வி அலுவலர் தகவல்
கேரளாவில் தங்கியுள்ள 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை பொதுத்தேர்வு எழுதுவதற்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தெரிவித்தார்.
தேனி,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 வகுப்பில் விடுபட்ட தேர்வு வருகிற 16-ந்தேதியும், பிளஸ்-2 கடைசி வகுப்பில் கடைசி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுதேர்வு 18-ந்தேதியும் நடக்கிறது. இந்தநிலையில் தேனி மாவட்டம் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் பலரும், இங்குள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டதால், அத்தகைய மாணவ-மாணவிகள் கேரள மாநிலத்தில் உள்ள தங்களின் பெற்றோர் வசிக்கும் ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதில் பலர் விடுதிகளில் தங்கி படித்தவர்கள். சிலர் தங்களின் உறவினர்கள் வீடுகளில் தங்கி படித்து வந்தனர்.
இதற்கிடையே 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தற்போது கேரளாவில் தங்கியுள்ள நிலையில், தேர்வு எழுத வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களை தேர்வு எழுதுவதற்காக கேரளாவில் இருந்து அழைத்து வருவதற்கு மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது.
அழைத்து வர ஏற்பாடு
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணியிடம் கேட்டபோது, “10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவ-மாணவிகளில் 281 பேர் கேரளாவில் உள்ள தங்களின் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். 28 பேர் தமிழகத்தின் வேறு மண்டல பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களை தேர்வு எழுத அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் ஒவ்வொரு மாணவ-மாணவியையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்து வருகின்றனர். மாணவ-மாணவிகளின் விடுதிகள் 11-ந்தேதி திறக்கப்பட உள்ளதால், அன்றைய தினம் கேரளாவில் வசிக்கும் மாணவ-மாணவிகள் தமிழக-கேரள மாநில எல்லை பகுதிக்கு வர வேண்டும். அங்கிருந்து அவர்களை விடுதிக்கு அழைத்துச் செல்வதற்கு சிறப்பு வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன” என்றார்.
Related Tags :
Next Story