யார் வேண்டுமானாலும் மின்கம்பங்களின் தரத்தை சோதனை செய்யலாம் ; அமைச்சர் தங்கமணி பேட்டி


யார் வேண்டுமானாலும் மின்கம்பங்களின் தரத்தை சோதனை செய்யலாம் ; அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 6 Jun 2020 2:53 AM GMT (Updated: 6 Jun 2020 2:53 AM GMT)

மின்கம்பம் தரமாக இல்லை என்பது தவறான தகவல் என்றும், மின்கம்பங்களின் தரத்தை யார் வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளலாம் எனவும் நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தி்ல் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சுகாதாரத்துறை அலுவலர்கள், டாக்டர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறையில் பணியின்போது இறந்த நபரின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணிக்கான பணி ஆணையினை அமைச்சர் தங்கமணி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்புவது குறித்து கடந்த சட்டமன்ற தொடரில் அறிவிக்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று காலம் முடிந்தவுடன் அந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் பொருத்துவதை போல தமிழகத்திலும் தரமான மின்கம்பங்கள் பொருத்தி வருகிறோம். காற்றின் வேகத்தை பொறுத்து சில மின்கம்பங்கள் சேதமடைகின்றன. மின்கம்பம் தரமாக இல்லை என்பது தவறான தகவல். மின்கம்பங்களின் தரத்தை யார் வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளலாம்.

மின்கட்டணத்தை பொறுத்தவரை ஜனவரி மாத கட்டணத்தை கட்டச்சொல்லி வருகிறோம். இப்போது புதிதாக கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட 2 மாதத்திற்கும், தற்போது புதிதாக எடுக்கப்பட்டுள்ள 2 மாதத்திற்கும் என மொத்தம் 4 மாதத்திற்கு உண்டான யூனிட்டுகளை இரண்டாக பிரித்துத்தான், பில் தொகை அனுப்பப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின்உபயோகம் அதிகமாக இருந்தது. பயன்படுத்திய யூனிட்டுகளைதான் இரண்டாக பிரித்து போட்டுள்ளோம். கட்டணத்தொகையை பிரித்து போடவில்லை. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தவறான தகவல்களை அறிக்கைகளாக வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் பிரசன்னா 6,900 யூனிட் பயன்படுத்தி இருந்தார். அதை இரண்டாக பிரித்தும், அவர் ஏற்கனவே செலுத்தாமல் இருந்த ரூ.13 ஆயிரத்தையும் சேர்த்து கட்டவேண்டும் என கூறியிருந்தோம். அந்த விளக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டார். ஒரு நடிகராக இருப்பவர் உண்மை நிலை அறியாமல் வாரியத்தின் மீது தவறான கருத்தை சொல்லியதற்கு நாங்கள் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

அதன்பிறகு ரூ.338.76 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அலுவலக கட்டிடம், விடுதி கட்டிடம் மற்றும் ஆஸ்பத்திரி கட்டிடங்களின் கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சாரதா, துணைதலைவர் பி.ஆர்.சுந்தரம், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சோமசுந்தரம், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் சித்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story