“தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை” திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்
“தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தினார்.
நெல்லை,
“தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தினார்.
நிவாரண உதவி
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகராட்சி பகுதியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு இலவச அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-
ரூ.10 ஆயிரம்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் அனைத்து கட்சிகளும் உதவிகள் செய்கின்றன. இருந்தாலும் அரசு கூடுதலாக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். தமிழக அரசு ரேஷன் கார்டு வைத்து உள்ள அனைவருக்கும் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணத்தொகை வழங்க வேண்டும். புலம் பெயர்ந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசின் தேசிய பேரிடர் நிதி மூலமாகவும் மக்களுக்கு உதவி செய்யலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். மோடி பிரதமராகி 6 ஆண்டுகளில் எந்தவொரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு உபதேசம் மட்டும் தான் செய்கிறார். ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கியதாக கூறும் மத்திய அரசு ஏழைகளுக்கும், சிறுவணிகர்களுக்கும் உதவி செய்ய வேண்டும். கொரோனாவை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலவச சிகிச்சை
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய படுக்கை வசதி இல்லை என்பதால், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அரசே கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்களுக்கு அரசு நிர்ணயித்த அந்த கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். இல்லையெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். 50 சதவீத படுக்கைகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். 3 ஆஸ்பத்திரிகள் வைத்து உள்ள பெரிய தனியார் ஆஸ்பத்திரி நிறுவனங்களிடம் ஒரு ஆஸ்பத்திரியை கொரோனா சிகிச்சைக்கு முழுமையாக பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தற்போது நடத்த வேண்டியது இல்லை. அடுத்த மாதம் நடத்தலாம். இல்லாவிட்டால், தேர்வை நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். கேரளாவில் யானைக்கு உணவில் வெடிவைத்து கொன்றவர்கள் மீது மிருகவதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, ரூபிமனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story