8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு மனு: விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்


8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு மனு: விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2020 8:35 AM IST (Updated: 6 Jun 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ததை கண்டித்து நேற்று சேலம் அருகே விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் - சென்னை இடையே 278 கி.மீட்டர் தொலைவிற்கு ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை என்கிற பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே இந்த திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இதன்படி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதால், நிலத்தை கையகப்படுத்தக்கூடாது எனக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் இத்திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இருப்பதால் திட்டத்தை ரத்து செய்வதோடு, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசு ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் இருந்த நிலையில் மத்திய அரசு சார்பில் நேற்று திடீரென சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டம் முடங்கி கிடப்பதாகவும் தெரிவித்து மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அருகே உள்ள பூலாவரி, குள்ளம்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டியதோடு, பூலாவரியில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் உயிரிழப்பு தொடர்கிறது. ஊரடங்கால் ஏராளமான பொதுமக்கள் பசியும் பட்டினியோடு வாழ்ந்து வரும் நிலையில், சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் எனவும், இந்த வழக்கை விரைந்து முடிக்க செய்த மனுவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Next Story