நெல்லை-நாகர்கோவில் பஸ்களில் படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் பயணிகள் அவதி
நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
நெல்லை,
நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
அரசு பஸ்கள்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் அரசு பஸ்கள் 50 முதல் 60 சதவீதம் என்ற அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.
நெல்லை கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 700 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3-ந் தேதியும், நேற்று முன்தினமும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
குறைவான கூட்டம்
நெல்லை புதிய பஸ்நிலையத்துக்கு பயணிகள் குறைவாகவே வந்தனர். அதிலும் மதிய நேரத்தில் ஒரு சில பயணிகளே வந்தனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் உள்ள ஊர்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்களில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
தனியார் பஸ்கள் இயக்கப்படாததால், நெல்லை மாநகர பகுதிகள் மற்றும் தனியார் பஸ்கள் செல்லும் ஊர்களுக்கு மட்டுமே பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பரிசோதனை
நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்களில் ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே பயணிகள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பயணிகள் அங்குள்ள பஸ்நிலைய பொறுப்பாளரிடம் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து, அவர் கொடுக்கின்ற படிவத்தில் ஆதார் எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
பயணிகள் அவதி
அந்த படிவத்தை பூர்த்தி செய்வதற்கு கல்வியறிவு இல்லாதவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் கைக்குழந்தையுடன் வந்த பெண்கள், சுமைகளுடன் வருபவர்கள் உள்ளிட்டோரும் அவதிப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் பஸ்களில் ஏறுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து பயணம் செய்தனர்.
Related Tags :
Next Story