நெல்லையில் ஒலிபெருக்கி, அலங்கார பொருட்களுடன் வந்து கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு சமூக இடைவெளியுடன் விழாக்கள் நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு ஒலிபெருக்கி, அலங்கார பொருட்களுடன் வந்த தொழிலாளர்கள், சமூக இடைவெளியுடன் திருமணம், திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு ஒலிபெருக்கி, அலங்கார பொருட்களுடன் வந்த தொழிலாளர்கள், சமூக இடைவெளியுடன் திருமணம், திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கலெக்டரிடம் மனு
தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்க தலைவர் சாய் முருகன், நிர்வாகிகள் பிரவீன்தாஸ், பொன்ராஜ் ஆகியோர் தலைமையில், பந்தல் அலங்கார தொழிலாளர்கள், ஒலிபெருக்கி நிலையம் நடத்துபவர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அலங்கார பொருட்கள், ஒலிபெருக்கி ஆகியவற்றுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘நாங்கள் பந்தல் அலங்கார தொழில், ஒலிபெருக்கி நிலையம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறோம். கொரோனா ஊரடங்கால் திருமணம், திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லாததால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியுடன் திருமணம் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். 200 பேர் அமரும் மண்டபத்தில் 100 பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும். கிருமிநாசினி தெளிக்க வேண்டும். புகைப்படம் எடுக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இதேபோல் விதிமுறைகளுடன் திருவிழாக்களும் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இதன்மூலம் ஒளி, ஒலி அமைப்பாளர்கள், பந்தல் மேடை அமைப்பாளர்கள், சமையல் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், கேட்டரிங் சர்வீஸ் தொழிலாளர்கள், பூ வியாபாரிகள், பாத்திர கடை தொழிலாளர்கள் என பல லட்சம் பேர் பயன் அடைவார்கள்‘ என்று கூறி உள்ளனர்.
பட்டா வழங்க கோரிக்கை
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘நான் அந்த பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருகிறோம். குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, மின்இணைப்பு பெற்றும், மாநகராட்சிக்கு வரி செலுத்தியும் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் எங்களை அந்த இடத்தை விட்டு காலி செய்யும்படி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு வேறு இடம் கிடையாது. எனவே இந்த இடத்தில் நாங்கள் தொடர்ந்து இருக்க பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story