சென்னையில் இருந்து ஆட்டோவில் லால்குடிக்கு வந்த ஓட்டல் ஊழியர் நடுவழியில் சாவு கொரோனாவால் இறந்தாரா?


சென்னையில் இருந்து ஆட்டோவில் லால்குடிக்கு வந்த ஓட்டல் ஊழியர் நடுவழியில் சாவு கொரோனாவால் இறந்தாரா?
x
தினத்தந்தி 6 Jun 2020 9:14 AM IST (Updated: 6 Jun 2020 9:14 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து ஆட்டோவில் லால்குடி அருகில் உள்ள சரடமங்கலம் கிராமத்துக்கு வந்த ஓட்டல் ஊழியர் நடுவழியில் உயிரிழந்தார்.

கல்லக்குடி, 

சென்னையில் இருந்து ஆட்டோவில் லால்குடி அருகில் உள்ள சரடமங்கலம் கிராமத்துக்கு வந்த ஓட்டல் ஊழியர் நடுவழியில் உயிரிழந்தார். அவர் கொரோனாவால் இறந்தாரா? என்று சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓட்டல் ஊழியர் நடுவழியில் சாவு

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புயல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் வசித்து வந்த ஓட்டல் ஊழியர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இருந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு ஆட்டோவில் வரும் வழியில் இறந்தது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதன்விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா சரடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 45). இவருடைய மனைவி கவிதா(43), இவர்களுக்கு பிரியதர்ஷினி(17), பிருந்தா(15) என்ற மகள்களும், தினேஷ்குமார்(12) என்ற மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் சென்னை தண்டையார்பேட்டையில் தனது குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள ஒரு ஓட்டலில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், ஓட்டல்கள் மூடப்பட்டதை தொடர்ந்து அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

சொந்த ஊருக்கு பயணம்

இந்தநிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு சென்றால், கொரோனா என்று தனிமைப்படுத்தி விடுவார்கள் என்று கருதிய கோவிந்தராஜ், அருகில் உள்ள மருந்துக்கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் உடல்நிலை சரியாகவில்லை.

இதனால் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த தனது இளையமகள் பிருந்தாவை மட்டும் பொதுத்தேர்வு எழுதுவதற்காக சென்னையில் விட்டு, விட்டு மற்ற அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். இதற்காக சென்னையில் ஆட்டோ ஓட்டிவரும் பெரம்பலூர் மாவட்டம், அய்யலூரை சேர்ந்த புகழேந்தியிடம் (32) கோவிந்தராஜ் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தினார். அவர்கள் சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டனர். இவர்களுடன் புகழேந்தியின் நண்பர் சத்தியமூர்த்தியும்(34) ஆட்டோவில் வந்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஆட்டோ வரும்போது, கோவிந்தராஜ் திடீரென உயிரிழந்தார்.

உடல் அடக்கம்

இதுபற்றி கவிதா, சரடமங்கலத்தில் உள்ள தனது உறவினர்களிடம் கூறி, உடலை ஊருக்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார். உடனே அவர்கள், ஊராட்சி தலைவர் ராஜமாணிக்கம், கிராம நிர்வாக அதிகாரி அந்தோணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து லால்குடி தாசில்தார் சண்முகசுந்தரி தலைமையில் வருவாய்த்துறையினர், புள்ளம்பாடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அழகுமணி, ஜோஸ்பின்ஜெஸிந்தா மற்றும் அதிகாரிகள், சிறுகனூர் போலீசார் ஆகியோர் சரடமங்கலம் கிராமத்துக்கு வந்தனர். நேற்று காலை சரடமங்கலத்துக்கு கோவிந்தராஜின் உடலுடன் வந்த ஆட்டோவை மறித்து, நேராக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வட்டார மருத்துவர் செல்வநாயகம் தலைமையிலான மருத்துவ குழுவினர், கோவிந்தராஜின் உடலில் இருந்து கொரோனா பரிசோதனைக்கு தேவையான மாதிரிகளை எடுத்தனர். பின்னர் சுகாதார ஊழியர்கள் கவச உடை அணிந்து, ஆட்டோவில் இருந்த கோவிந்தராஜின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றினார்கள். இதைத்தொடர்ந்து சுடுகாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமாக குழிதோண்டி, கோவிந்தராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனாவால் இறந்தாரா?

மேலும் கோவிந்தராஜின் மனைவி, குழந்தைகளுக்கும், அவர்களுடன் வந்த ஆட்டோ டிரைவருக்கும் கொரோனா பரிசோதனைக்காக சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் கொரோனாவால் இறந்தாரா? என்று சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Next Story