தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு அதிகாரிகள் நேரில் விசாரணை
சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பள்ளி முதல்வரிடம் விசாரணை நடத்தினர்.
சிவகாசி,
சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளி, 10-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தது. அதில் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களில் சமூக அறிவியல் பாடத்தில் சந்தேகம் உள்ளவர்கள் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறி இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று காலை அந்த பள்ளிக்கு 21 மாணவர்கள் வந்தனர். அவர்களுக்கு ஒரு வகுப்பறையில் சிறப்பு வகுப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாருக்கு தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் சிவகாசி தாசில்தார் வெங்கடேசன் மற்றும் சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற முதல்வரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவர்களிடம் நடந்த விசாரணையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்தது தெரியவந்தது. இது குறித்து கல்வி அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை
இதுகுறித்து பட்டதாரி காங்கிரஸ் அமைப்பின் மாநில நிர்வாகி மைக்கேல் கூறியிருப்பதாவது, கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசும், கல்வித்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மாணவர்களின் நலனுக்காக எடுத்து வரும் நிலையில் விதிகளை மீறி மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்தி இருக்கிறார்கள். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வர இன்னும் 2 மாதங்கள் தேவைப்படும் நிலையில் தற்போதே பள்ளி கட்டணம் வசூலிப்பது வேதனையானது.
Related Tags :
Next Story