ராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை
ராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தளவாய்புரம்,
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 28), கட்டிட தொழிலாளி. இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், 3 வயதில் மகளும், 2 வயதில் மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது.
உடனே அவர் தன் மனைவியிடம் வெளியே சென்று வருகிறேன் என்று கூறி சென்றவர், இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. எனவே அவரது உறவினர்கள் நேற்று காலை இசக்கிமுத்துவை தேடி சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.
இறந்த நிலையில் கிடந்தார்
இதற்கிடையில் அம்மையப்புரம் தரைப்பாலம் அருகே உடல், கழுத்து, கை, கால் என பல்வேறு இடங்களில் வெட்டுக்காயத்துடன் அவர் இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே தளவாய்புரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இசக்கிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சம்பவ இடத்தை ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இசக்கிமுத்துவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது என்றும், நேற்று தான் அவருக்கு திருமண நாள். இந்நாளில் எங்களை தவிக்க விட்டுப் போய்விட்டாரே என்று அவர் மனைவி கதறி அழுதது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாலைமறியல்
இதற்கிடையில் இசக்கிமுத்துவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று இரவு தளவாய்புரம் காமராஜர் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story