முக கவசம் அணியாமல் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை ; போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை


முக கவசம் அணியாமல் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை ; போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2020 9:50 AM IST (Updated: 6 Jun 2020 9:50 AM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்,

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது அத்தியாவசிய தேவைக்காக அதிகளவில் வெளியே வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றியே பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் கனகேசன், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், பிரபு மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஆட்டோவில் டிரைவர் மற்றும் 2 பேரும், ஷேர் ஆட்டோவில் டிரைவர் மற்றும் 3 பேரும் பயணம் செய்யலாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள், 2 ஷேர் ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு அதன் டிரைவர்களை கடுமையாக எச்சரித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என்பதை கண்காணித்தபோது முக கவசம் அணியாமலும், முக கவசத்திற்கு பதிலாக கர்சிப் அணிந்து கொண்டும் வந்த 76 வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் பொதுமக்களிடம் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தற்போது கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல் உயிரிழப்புகளும் அதிகளவில் நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே வருதல் வேண்டும்.

முக கவசம் இல்லாதவர்கள் தயவு செய்து வெளியே வராமல் வீட்டிலேயே இருங்கள். அதையும் மீறி முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்பவர்களும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சானிடைசர் திரவத்தால் கைகளை நன்கு கழுவ வேண்டும். அதேநேரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றியே பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும்.

ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கார் டிரைவர்கள் விதிகளுக்கு உட்பட்டே வாகனங்களை இயக்க வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story